

சென்னை: ‘லஞ்ச செலவுகள் நீக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் சேமிப்புக்கு ஏற்ப பள்ளிக் கட்டணங்களும் குறைக்கப்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகனிடம் கேட்டுக் கொள்கிறேன்’ என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பள்ளிகளுக்கான அங்கீகாரப் புதுப்பிப்புக்கு ரூ.2–3 லட்சமும், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தடையில்லா சான்றிதழுக்கு (NOC) ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த முறைகேடுகளை ஒழித்து, ஆன்லைன் முறையில் அனுமதிகள் வழங்கப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பை தனியார் பள்ளி நிர்வாகங்கள் வரவேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால், இதனால் பள்ளிகளின் செலவுகள் குறைகிறது எனில் அதன் பலன் பெற்றோர்களுக்கும் சென்றடைய வேண்டும். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கல்விக் கட்டண உயர்வால் பெரும் சுமையை எதிர்கொண்டு வருகின்றன.
எனவே, லஞ்ச செலவுகள் நீக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் சேமிப்புக்கு ஏற்ப பள்ளிக் கட்டணங்களும் குறைக்கப்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகனிடம் கேட்டுக்கொள்கிறேன்.
அனுமதி வழங்கும் முறையில் வெளிப்படைத்தன்மை வருவது போலவே, கல்விக் கட்டண நிர்ணயத்திலும் நியாயமும் வெளிப்படைத்தன்மையும் நிலைநிறுத்தப்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.