ஜன.6 முதல் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு: அமைச்சர்கள் குழு மீண்டும் பேச்சுவார்த்தை

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ஜனவரி 6 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஜாக்டோ-ஜியோ, போட்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு இன்று (வெள்ளி) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஊரக வளர்ச்சித் துறையின்செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு, ஜாக்டோ-ஜியோ, தலைமைச் செயலக சங்கம், ஆசிரியர்கள் சங்கம் உள்பட அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கடந்த அக்டோபரில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜன. 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ, போட்டோ ஜியோ உள்பட அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை டிச.22-ம் தேதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் அழைத்துப் பேசினர்.

ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என சங்கங்கள் அறிவித்தன. பேச்சுவார்த்தையை அமைச்சர்கள் குழுசரிவர நடத்தவில்லை எனவும் சங்கங்கள் குற்றம்சாட்டின. இந்தச் சூழலில் ககன்தீப் சிங்பேடி குழு தனது இறுதி அறிக்கையை டிச.30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இறுதி அறிக்கை தொடர்பாகஅமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், அமைச்சர்கள் குழு, ஜாக்டோ-ஜியோ,போட்டோ-ஜியோ நிர்வாகிகளு டன் தலைமைச் செயலகத்தில் இன்று (வெள்ளி) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதற்காக அந்த சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக போட்டோ-ஜியோ தலைமை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவருமான டி.அமிர்தகுமார் கூறும்போது, ‘‘வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளையும், காலை 11.30 மணிக்கு எங்கள்கூட்டமைப்பின் நிர்வாகிகளையும் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என்பதில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உறுதியாக உள்ளனர். எங்களை போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளாமல் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in