

சென்னை: அனைத்து தாலுகா, தாலுகா அல்லாத மருத்துவமனைகளிலும் தலா 10 மருத்துவர்களை நியமித்து 24 மணி மருத்துவ சேவையை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநிலச் செயலாளர் டாக்டர் டி.செந்தில்குமார் சங்கத்தின் கடந்த கால சாதனைகள் மற்றும் தமிழக அரசு மருத்துவர்கள் எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மாநிலப் பொருளாளர் டாக்டர் முத்துக்குமார் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில, மாவட்ட நிர்வாகிகள், சேவை முதுநிலை பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு விரிவான விவாதங்களில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழக சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்தும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம். தமிழக மக்களின் நலனுக்காக புதிய சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்தி வரும் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்.
சம்பள உயர்வு உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகள் குறித்து அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களுடனும் அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்.
டிஎம்இ, டிஎம்எஸ், டிபிஎச் இயக்குநர் பதவிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக மூத்த அரசு மருத்துவர்களை கூடுதல் சுகாதாரச் செயலாளர்களாக நியமிக்க வேண்டும்.
தமிழகத்தின் 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை பாதுகாக்க அரசு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து தாலுகா மற்றும் தாலுகா அல்லாத மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் தலா 10 மருத்துவர்களை நியமித்து 24 மணி நேர சேவையை உறுதி செய்ய வேண்டும்.
அரசு மருத்துவர்களுக்காக மருத்துவ வீட்டு வசதி வாரியம் அமைத்து, அரசு மருத்துவமனைகளுக்கு அருகில் குடியிருப்பு வசதி செய்ய வேண்டும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் போதுமான ஆசிரியர்களுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி துறைகளை தொடங்க வேண்டும்.
புதிதாக பதவி உயர்வு பெறும் பேராசிரியர்களுக்கு ஒரு வார நிர்வாக பயிற்சி வழங்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளிலும் குறைந்தபட்சம் 5 மருத்துவர்கள் மற்றும் போதுமான துணை மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
24 மணி நேர பணிப்படி, தேர்வு பணிப்படி, பிரேதப் பரிசோதனை படி உள்ளிட்ட அனைத்து படிகளையும் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.