குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மண்ணில் புதைந்த அரசுப் பேருந்து: 6 பயணிகள் பத்திரமாக மீட்பு

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மண்ணில் புதைந்த அரசுப் பேருந்து: 6 பயணிகள் பத்திரமாக மீட்பு
Updated on: 
1 min read

குன்னூர்: குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் அருகே மண் சரிவு ஏற்பட்டு அரசுப் பேருந்து புதைந்தது. அதில் பயணம் செய்த 6 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 

கனமழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த இரண்டு சாலைகளும் நள்ளிரவு முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மண்ணில் புதைந்த அரசு பேருந்து:

குன்னூர் மலைப்பாதையில் பர்லியாறு அருகே நேற்று இரவு பெய்த கனமழையால் ஊட்டியில் இருந்து கோவையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மண் சரிந்து விழுந்ததால் பேருந்து முழுவதுமாக சேதமடைந்தது. பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். 

பேருந்தில் பயணம் செய்த 6 பயணிகள், பத்திரமாக மீட்கப்பட்டனர். காயமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாலையில் விழுந்த பாறை:

மஞ்சூர் - கோவை சாலையில் பெரும்பள்ளத்தில் ராட்சத பாறை சரிந்து சாலை நடுவே விழுந்தது. போக்குவரத்து தடைபட்டதை அடுத்து, சம்பவப் பகுதிக்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் உதவியுடன் சாலை நடுவே இருந்த பாறையை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இச்சாலை சில இடங்களில் அபாயகரமான பாறைகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலையால், நெடுஞ்சாலைத் துறையினர் அடையாளம் கண்டு பாறைகளை அகற்ற வேண்டும். என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை: 

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்த மழையின் காரணமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வகுப்புகளும் நடத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பர்லியாறில் 250 மி.மீட்டர் மழை பதிவானது.

கீழ் கோத்தகிரி – 200 மி.மீ, எடப்பள்ளி – 161 மி.மீ, கோத்தகிரி – 137 மி.மீ,ஸகெத்தை – 84 மி.மீ, தேவாலா – 82 மி.மீ, கோடநாடு – 81 மி.மீ, குன்னூர் ரூரல் – 75 மி.மீ, ஓவேலி – 68 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in