“டெல்லிக்கு செல்வதால் நாங்கள் பாஜகவின் அடிமை கிடையாது” - செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

Updated on
2 min read

மதுரை: “அதிமுக அமித் ஷா சொல்வதை கேட்கிறது, அது பாஜகவுக்கு அடிமை என்று சொல்வது, உங்கள் கற்பனை. எங்கள் பொதுச்செயலாளர் பழனிசாமி, டெல்லிக்கு செல்வதால் நாங்கள் டெல்லிக்கு அடிமை கிடையாது” என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “ காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, “60 ஆண்டுகளாக நாங்கள் ஆட்சியில் இல்லை. கூடுதல் சீட் தர வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தவறு. தொண்டர்களின் கருத்தைதான் நான் பிரதிபலிக்கிறேன்” என்கிறார். “நாங்கள் ஏன் வேறு கட்சியுடன் கூட்டணி பேசக்கூடாது. எங்களை யார் தடுப்பதற்கு” என்று காங்கிரஸாரே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்களது கட்சித் தலைமை சொல்லாமலே அவர்கள் அப்படி பேசுகிறார்கள். திமுக தலைமையும், அதன் கூட்டணியும் வலுவிழந்துவிட்டதையே இது காட்டுகிறது. திமுக வலுவாக இருந்தால் இந்தமாதிரி யாராவது சொல்வார்களா?. பிரவீன் சக்கரவர்த்தி கேள்விகளுக்கு ஏன் முதல்வர் பதில் சொல்வில்லை.

காங்கிரஸும், வேறு எந்த கட்சியும் வேண்டாம், தனித்து நிற்கப்போகிறோம் என்று திமுக தைரியமாக சொல்லத் தயாரா?. இது பொதுமக்கள் குமுறலையும் இந்த ஆட்சிக்கு எதிரான அலை எந்தளவுக்கு இருக்கிறது என்பதையும் காட்டுகிறது. நீங்கள் அடித்து வைத்திருக்கிற கொள்ளை பணத்தை எவ்வளவுதான் கொடுத்தாலும் சரி, மக்கள் மனம் மாறத் தயாரில்லை.

‘ஸ்டாலின்தான் வர்றாரு, விடியல் தர போறாரு, ’ என்ற பாட்டை இப்போது எந்த இடத்திலாவது கேட்க முடிகிறதா? அவர்களே அந்த பாட்டை போடுவதற்கு தர்மசங்கப்படுகிறார்கள். உங்களுக்கு சவால் விடுகிறேன், ஆயிரம் பெட் கட்டுவோம், அந்த பாடலை எந்த இடத்தில் திமுகவினர் போட்டார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

தமிழகத்தில் முதன்மையான பெரிய கட்சி எதுவென்றால் அதிமுக மட்டுமே. அதனால்தான், அதிமுக, தங்கள் கூட்டணியில் யாரும் வர வேண்டும் என்று முடிவெடுக்கிறது. இதில், ‘அமித்ஷா சொல்வதை கேட்கிறார்கள், பாஜகவுக்கு அடிமை’ என்று சொல்வது, உங்கள் கற்பனை. எங்கள் பொதுச்செயலாளர் பழனிசாமி, டெல்லிக்கு செல்வதால் நாங்கள் டெல்லிக்கு அடிமை கிடையாது.

அவர் கூட்டணி பேச்சுவாரத்தைக்காக மட்டுமே செல்லவில்லை. தமிழக மக்கள் நலன் சார்ந்த பல கோரிக்கைகளுடன் அவர் டெல்லி சென்றுள்ளார். திமுகவின் இந்த 4 ஆண்டு ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்று ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை கொண்டு போய் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கொடுக்க போய் உள்ளார். அவரை சந்திக்க செல்வதில் என்ன தவறு இருக்கிறது.

கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்புக்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி கொடுக்க அதிமுக வலியுறுத்தி வந்தது. தற்போது அதன்படி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா நிறைவேற்றி கொடுத்துள்ளனர். அதற்கு நன்றி தெரிவிக்கவும் எங்கள் பொதுச்செயலாளர் சென்றுள்ளார். இப்படி பல பணிகளுக்காக அவர் டெல்லி சென்றுள்ளார். அதற்குள் ஊடகவிலாளர்கள் பல முடிவெடுத்து கட்டுகதைகளாக அவிழ்த்துவிடுகிறீர்கள். உங்கள் கற்பனை குதிரைக்கு நாங்கள் ஆளில்லை.

கூட்டணி பலத்தில்தான் திமுகவே இருக்கிறது. ஜெயலலிதா மாதிரி ஆணித்தரமாக ஸ்டாலினால் முடிவெடுக்க முடியுமா?. தனியாக நின்று ஜெயிக்கிற அளவுக்கு தமிழகத்தில் திமுகவால் மறுமலர்ச்சியா ஏற்பட்டிருக்கிறது. பாலாறும், தேனாறும் பெருகி ஓடுவது போல் திமுகவின் விளம்பர ஆட்சிதான் நடக்கிறது. ஸ்டாலின் தன்னை பற்றி பெருமை பேச வைத்து ரசிக்கிறார். மக்கள் அவரைப் பற்றி பெருமையாக பேச வேண்டும் என சொல்லிக்கொடுத்து பேச வைக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைப்பீர்களா என்று கேட்டதற்கு, “எங்கள் பொதுச்செயலாளரை பார்தது கேளுங்கள், எங்களுக்கு எதுவும் தெரியாது, ’’ என்றார்.

‘செல்லூர் ராஜூ சொன்னார் என்று...’ திருப்பரங்குன்றம் அருகில் முதல்வர் கார் பஞ்சர் ஆகிவிட்டது, இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, செல்லூர் ராஜூ, “முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அந்த முருகப் பெருமானை ரொம்ப அதிகமாக விமர்சனம் செய்ததால்தான் ஒரு வேளை முருகப் பெருமானே முதல்வர் வந்த காரில் ஏதாவது செய்துவிட்டாரோ?. செல்லூர் ராஜூ சொன்னார் என்று செய்தி போட்டுவிடப் போறீங்க.

பொதுவாக திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். மதிக்க வேண்டும். மூன்று முறை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு போய்விட்டது. அரசே இரு சமுதாயங்களுக்கு இடையே மோதலை உருவாக்கப் பார்க்கிறது என்று நீதியரசர்களே கடுமையாக சாடியுள்ளார்கள்” என்றார்.

<div class="paragraphs"><p>செல்லூர் ராஜூ</p><p></p></div>
“தணிக்கை வாரியம் அரசியல் ஆயுதமாவதை கண்டிக்க வேண்டும்” - ‘ஜனநாயகன்’ சர்ச்சையில் ஜோதிமணி கருத்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in