

ஞானசேகரன்
சென்னை: என் மகனை சிறைக்குள்ளேயே கொலை செய்யப் பார்க்கின்றனர் என ஞானசேகரனின் தாயார் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரனை (38) கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸார் 2024 டிசம்பரில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை (30 ஆண்டு சிறை) விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி தீர்ப்பளித்தது.
இதையடுத்து அவர் புழல் சிறையில் தண்டனை கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கடந்த 20-ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு (வலிப்பு) ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், குணமடைந்து மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் சிறைக் காவலர்கள் தன் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தியதாகக் கூறி ஞானசேகரன், சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவரை சிறைத் துறை ஊழியர்கள் சமாதானம் செய்தனர்.
இதற்கிடையே ஞானசேகரனின் தாய் கங்காதேவி, தனது மகனை சிறை வார்டன் மற்றும் காவலர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதால் உடல் நலம் பதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் சிறையில் தன் மகனைத் தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சிறை வார்டன் மற்றும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், “என் மகன் ஞானசேகரன் சுயநினைவின்றி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அவர் விழித்தவுடன் சிறை ஜெயிலர் சாந்தகுமார் மற்றும் சிறைக் காவலர்கள் 5 பேர் சேர்ந்து சிறையில் விளக்குகளை அணைத்துவிட்டு தன்னை கடுமையாக லத்தியால் அடித்து கொலை வெறிதாக்குதல் நடத்தியதாகக் கூறினார்.
எனவே, சிறையில் என் மகனை கொலை செய்யப் பார்க்கின்றனர். மகனின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனைக் கண்டித்து ஞானசேகரன் சிறையில் அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். மகன் மீது தாக்குதல் நடத்திய சிறைத் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.