

பிரதிநிதித்துவப் படம்
சென்னை: திருப்பூர் மாநகரில் நிலவும் குப்பை பிரச்சினைக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு திருப்பூர் மாநகரில் நிலவும் குப்பைப் பிரச்சனையில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருப்பூரில் காலங்காலமாக நிலவும் குப்பை பிரச்சினையால் மாணவர்கள், பணிக்குச் செல்லும் இளைஞர்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் குப்பைப் பிரச்சனை தீவிரமாக உள்ளது.
திருப்பூரில் ராயபுரம் ரோட்டரி பள்ளி அருகே நொய்யல் ஆற்றின் இரு புறங்களிலும் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. மேலும், ரயில் நிலையம் பின் புறமாக மக்கள் பயன்படுத்தும் வழித் தடத்திலும் குப்பைகள் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலத்தில் திருப்பூர் 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் பல டன் குப்பைகள் அந்தந்த பகுதியில் உள்ள பாறை குழிகளில் கொட்டப்பட்டு வந்தது. அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து செல்லவே முடியவில்லை. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் முன்பு ஆங்காங்கே பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நகரின் விரைவான வளர்ச்சியால் பாறைக்குழியைச் சுற்றியுள்ள பகுதிகள் வீடுகளாக மாறிவிட்டன. இதனால் அங்கு குப்பை கொட்டுவதற்கு அந்தந்த பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். முதலியபாளையம் அருகே உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் உயர்நீதிமன்றம் அங்கு குப்பை கொட்ட தடை விதித்தது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டாலும், இப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை. குப்பை கொட்டும் இடங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதன் (நிலத்தடி நீர் மாசுபாடு, துர்நாற்றம்) காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பல மாதங்களாகப் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண போராடி வருகின்றனர்.
திருப்பூர் சின்னகாளிபாளையத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் இருந்து ஆண்கள், பெண்கள் என சுமார் 1,000 பேர் குப்பை லாரிகளைத் தடுத்து நிறுத்தி சாலை மறியல், கடையடைப்பு என போராடியபோது போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தி, 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட நூற்றுக் கணக்கானவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்ததும், சிலரை சிறையில் அடைத்ததும் மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்நிலையில் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கோரி போராட்டங்கள் தொடர்கின்றன. குறிப்பாக பொதுமக்கள் அரசின் உறுதியான நடவடிக்கைக்காகக் காத்திருக்கிறார்கள். அதாவது குப்பைக் கொட்டுவதை நிரந்தரமாகத் தடை செய்து, உறுதியான மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே திருப்பூர் மாநகரில் நிலவும் குப்பை பிரச்சினைக்கு மக்கள் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் விரைவில் நிரந்தர தீர்வு எடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.