

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
மகளிருக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்க முடியாத திமுக அரசை தூக்கி எறிய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.
ஒட்டன்சத்திரம் தொகுதியில், தமாகா வேட்பாளர் விடியல் எஸ்.சேகரை ஆதரித்து, அக்கட்சியின் ஜி.கே.வாசன் நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது: மக்கள் விரோத, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களின் கழுத்தை அறுத்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டியது அவசியம். அவர்களுக்கான தண்டனை, ஆட்சி மாற்றத்தை கொடுப்பது தான். விலைவாசி உயர்வு, குப்பைக்கு கூட வரி என மக்களின் மீது சுமையை அதிகரித்தது திமுக அரசு. மகளிருக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. மகளிருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத திமுக அரசை தூக்கி எறிய வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. தமிழகத்தில் எந்த துறையிலும் முன்னேற்றம் இல்லை. திமுக அரசு, மத்திய அரசை எதிரியாக பார்க்கிறது. இந்தியா பாதுகாப்பான நாடாக இருக்கிறது என்றால், அதற்கு மோடி தான் காரணம். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் 3 மாதங்களில் போதைப் பொருட்கள் ஒழிக்கப்படும். மக்கள் விரோத, திமுக தீய சக்தியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.