

சென்னை: இறக்குமதி வரியைக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்திருப்பது, பிரதமர் மோடியின் ராஜதந்திர நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அரசு அறிவித்திருக்கிறது.
இது பிரதமர் மோடியின் ராஜதந்திரத்தாலும், மத்திய வெளியுறவுத் துறை மற்றும் வர்த்தகத் துறையின் தொடர் முயற்சியாலும் கிடைத்திருக்கும் வெற்றி.
இதற்காக பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகளை பாராட்டுகிறோம். திமுக அளித்த வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கந்தர்வக்கோட்டை அருகே துவார் கிராமத்தில் சூரியஒளி மின் உற்பத்திக்காக விளை நிலங்களில் மின் கம்பங்களை நடுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இதை தவிர்க்க வேண்டும்.
சம்பா சாகுபடி நெற்பயிர்கள் விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும். வறட்சி மாவட்டங்களில் ஆறுகளைத் தூர்வாரி, தடுப்பணை அமைக்க வேண்டும். நெல் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.