

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுகள் பிப்.8-ம் தேதி நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தேர்வு தேதியை அறிவித்த பிறகு, அதற்கான பணிகளை முறையாக செய்திருக்க வேண்டியது அந்த நிர்வாகத்தின் கடமை. இதை செயல்படுத்த வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு.
தேர்வர்கள் இரவு பகல் பாராமல் படித்து தங்களை தயார் செய்துகொண்டு லட்சியக் கனவுகளோடு வரும் சூழலில், ‘தேர்வு ரத்து’ என்ற அறிவிப்பு அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தேர்வு ரத்தாவது, ஒரே எண்ணுக்கு 2 தேர்வு மையங்கள் வருவது போன்ற குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதெல்லாம் நிர்வாகத் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டு.
டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கும், தேர்வர்கள் வேதனை அடைந்ததற்கும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகள் நடக்காமல் இருக்க, தமிழக அரசும், டிஎன்பிஎஸ்சி நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.