

சென்னை: செட்டிநாடு அரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் பேத்தியும், குமார ராஜா முத்தையா செட்டியாரின் மனைவியுமான குமார ராணி மீனா முத்தையா (93), சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரமம் பள்ளி, அடையாறில் குமார ராணி மீனா முத்தையா மேல்நிலைப் பள்ளி, அதேபோல், குமார ராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களை தொடங்கி கல்வி உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.
இந்நிலையில், குமார ராணி மீனா முத்தையா வயது மூப்பு காரணமாக ஊட்டியில் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து, அவரது உடல் கோவையில் இருந்து விமானத்தி்ல் சென்னை கொண்டுவரப்பட்டு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு மாளிகையில் உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டது.
குமார ராணி மீனா முத்தையா உடலுக்கு கல்வியாளரகள், பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
நேற்று காலை செட்டிநாடு மாளிகையில் இருந்து குமாரராணி மீனா முத்தையாவின் உடல் ஊர்வலமாக மயிலாப்பூர் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அவரது இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக, மயிலாப்பூர் மயானத்தில் குடும்ப உறுப்பினர்கள் சூழ, குமார ராணி மீனா முத்தையாவுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.