

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
சென்னை: வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (VB-G RAM G) தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையைப் பரிசீலித்து, அவர்களுக்கான ஊதியத்தை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (VB-G RAM G) கீழ் தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 10 வாரங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது.
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பணியாற்றும் இத்திட்டத்தில், வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்பட வேண்டிய ஊதியம், பத்து வாரங்களைக் கடந்தும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால், தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கெனவே, அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காத அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், தொழிலாளர்களின் உழைப்பிற்கான ஊதியத்தைக்கூட உரிய நேரத்தில் வழங்காமல் காலதாமதம் செய்வதால், அடுத்தடுத்து வரவிருக்கும் பண்டிகைக் காலங்கள் அவர்களுக்குச் சோதனை மிகுந்த காலங்களாக மாறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (VB-G RAM G) தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையைப் பரிசீலித்து, அவர்களுக்கான ஊதியத்தை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறையையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.