ஆர்.பி.உதயகுமார் | கோப்புப்படம்
ஆர்.பி.உதயகுமார் | கோப்புப்படம்

‘அதிமுக என்றால் இனி இபிஎஸ்தான்’ ; திமுகவில் இணைந்து ஓபிஎஸ் ஒப்புதல் வாக்குமூலம்! - ஆர்.பி.உதயகுமார்

Published on

மதுரை: “இப்போது அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக அவர்களே சொல்லிவிட்டனர். ஓபிஎஸ் மாற்றுக் கட்சியில் இணைந்ததால் எந்த விளைவோ, தாக்கமோ ஏற்படாது” என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி வழிநடத்துகிறார். அதிமுக தொண்டர்கள் பழனிசாமியை முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதில் சிலருக்கு உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் பல்வேறு முகாம்களில் இணைந்து வருகின்றனர், அதுபற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை.

ஒவ்வொரு கட்சியிலும் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருப்பது என்பது புதியதல்ல. இது எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலேயே நடந்துள்ளது. தேர்தல் நேரத்தில் சிலர் மாற்று முகாம்களுக்கு செல்வதை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.

இதுபோன்ற சலசலப்புகள், திசைதிருப்பல்கள் நடந்துகொண்டுதான் இருக்கும். அதனை கடந்து எடப்பாடி பழனிசாமி வெற்றிவாகை சூடுவார். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கியுள்ள இபிஎஸ் வெற்றிபெற்று முதல்வராவார்.

இதுவரை அதிமுக உரிமை மீட்புக் குழு என ஒரு குழப்பமான நிலையை தான் தமிழக மக்களுக்கு செய்தியாக சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால், இப்போது அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக அவர்களே சொல்லிவிட்டனர். ஓபிஎஸ் மாற்றுக் கட்சியில் இணைந்ததால் எந்த விளைவோ, தாக்கமோ ஏற்படாது” என்றார்.

ஆர்.பி.உதயகுமார் | கோப்புப்படம்
“ஓபிஎஸ் வருகை திமுக வெற்றிக்கு மிகப்பெரிய பாதகம்!” - தமிழிசை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in