

மதுரை: எப்கியூஎல் மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேலூரைச் சேர்ந்த சாந்தகுமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘எப்கியூஎல் செயலியில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் என பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ரூ.1,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளனர். இதில் முதலீடு செய்தவர்கள் பெரும்பாலும் பெண்கள், ஏழை, நடுத்தர வகுப்பினர் மற்றும் கூலித் தொழிலாளர்கள்.
இந்த செயலி கிரிப்டோ கரன்சி, அமெரிக்க டாலர் போன்ற சர்வதேச தொடர்புகளோடு இருப்பதாலும், இணையத்தை பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளதாலும், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், "இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மனுதாரரும் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர் இதனை பொதுநல வழக்காக தொடர முடியாது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘குற்றம்சாட்டப்பட்டவர்களின் கருத்தை கேட்காமல் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற முடியாது. எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்களையும் வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு, மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பதை முடிவு செய்வதற்காக விசாரணையை அக்.8-க்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.