

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சியினரை தாக்கிய திமுகவினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தேர்தல் முடிவுக்குப் பின் கூட்டணியிலிருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்ததால், அக்கட்சியினர் மீது திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜமால் முகமது யூனுஸ் மற்றும் காங்கிரஸ் எம்.பி. சுதா ஆகியோருக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி முன்பு கடந்த 8-ம் தேதி ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றபோது அங்கு வந்த திமுகவினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் பிரமுகர்கள் தாக்கப்பட்டு, கொடியும் சேதப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டார தலைவர் ராஜா அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிந்து திமுகவைச் சேர்ந்த மருதமுத்து, வின்சென்ட், ரகு, ஜெயச்சந்திரன் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து, காவல் நிலைய பிணையில் விடுதலை செய்தனர்.