

சிவகங்கையில் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர் விசுவநாதன்.
சிவகங்கை: முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் (79), உடல்நலக் குறைவால் நேற்று சிவகங்கையில் காலமானார்.
சிவகங்கை அருகே ஏரியூரைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன். இவர் 1999 – 2004-ல் சிவகங்கை தொகுதி எம்.பி.யாக இருந்தார். 2004 – 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மேலும், 2013 - 2014-ல் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். சட்டம் பயின்ற அவர், உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலையில் பி.எச்டி. பட்டம் பெற்றுள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டில் தமிழக காங்கிரஸ் மனித உரிமைத் துறை தலைவராகவும், 2002-ம் ஆண்டில் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவராகவும், 2003-ல் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி கொறடாவாகவும், 2004-ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் சிவகங்கையில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார். சுதர்சன நாச்சியப்பனுக்கு தேவகி என்ற மனைவியும், ஜெயசிம்மா, சாணக்கிய மாதவன் ஆகிய 2 மகன்களும், யமுனா நாச்சியார் என்ற மகளும் உள்ளனர். இவர், காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூரின் சித்தப்பா ஆவார்.
சுதர்சன நாச்சியப்பன் உடலுக்கு மாணிக்கம் தாகூர், உயர்கல்வித் துறை அமைச்சர் விசுவநாதன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., தவெக சார்பில் சி.ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சுதர்சன நாச்சியப்பனின் உடல் இன்று சொந்த ஊரான ஏரியூரில் அடக்கம் செய்யப்படுகிறது.
சுதர்சன நாச்சியப்பன் மறைவுக்கு தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி:
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்: பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க உரிமைக் குரல் எழுப்பியவர்.
பாமக தலைவர் அன்புமணி: இளம்வயதில் இருந்தே காங்கிரஸ் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சமூகநீதியில் அக்கறை கொண்டவர்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: இந்தியா சார்பில் ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பேசியவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இளம் வயது முதலே மக்கள் பணி ஆற்றிய பெருமை மிக்கவர். காமராஜர் காலத்தில் கட்சிக்காக சிறப்பாக பணியாற்றியவர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
முன்னாள் எம்.பி சு.திருநாவுக்கரசர்: நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடர்ந்து பங்கேற்று, மிகச்சிறந்த பார்லிமெண்டேரியன் என பாராட்டப்பட்டவர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
துக்கம் அனுசரிப்பு: சுதர்சன நாச்சியப்பன் மறைவையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று மாலை நடந்த இரங்கல் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான குலாம் அகமது மிர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும், கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.