

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதியப்பட்ட வழக்கில் தி.நகர் முன்னாள் எம்எல்ஏ சத்யா தனது மனைவியுடன் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2016 - 21 காலகட்டத்தில் சென்னை தி.நகர் அதிமுக எம்எல்ஏ-வாக பதவி வகித்தவர் பி.சத்யா என்ற சத்யநாராயணன். இவர் தனது பதவிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.9.41 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக சத்யநாராயணன் மற்றும் அவரது மனைவி ஜெயசித்ரா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 2023-ல் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது முன்னாள் எம்எல்ஏ சத்யநாராயணன், அவரது மனைவி ஜெயசித்ரா ஆகிய இருவரும் ஆஜராகினர். லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 130 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு, 132 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக தங்கள் மீது போலீஸார் தவறாக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூலை 17-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.