

நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், கோவை தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார்.
சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், கோவை தெற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், கடந்த முறை கரூரில் போட்டியிட்டார். தங்களுக்கு சாதகமாக இல்லாத கொங்கு மண்டலத்தில் இம்முறை கணிசமான தொகுதிகளை கைப்பற்றி விட வேண்டும் என நினைத்த திமுக தலைமை.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மண்டல பொறுப்பாளராக நியமித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியது. அதற்கேற்ப அவரும் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் முகாமிட்டு தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வந்தார்.
அதேபோல், அதிமுகவையும், எஸ்.பி.வேலுமணியின் ஆதிக்கத்தையும் எதிர்கொள்ள ஏதுவாக, கோவையில் திமுக போட்டியிடும் தொகுதிகளில், வலுவான வேட்பாளர்களை களமிறக்க வேண்டும் என திமுகவினரும் தலைமைக்கு வலியுறுத்தி வந்தனர். சென்னையில் முதல்வர் நடத்திய நேர்காணலில் பங்கேற்ற போதும், திமுகவினர் இதை அழுத்தமாக பதிவு செய்தனர். மேலும், உளவுத் துறையினரின் அறிக்கையும், கோவையில் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டுமென்றால் வலுவான வேட்பாளர்களாக இருக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், கோவையில் செந்தில் பாலாஜி போட்டியிடுவார் என தகவல் பரவியது. அதை அப்போது செந்தில் பாலாஜி மறுத்து மீண்டும் கரூரில் தான் போட்டி என பேட்டியளித்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார் என்ற தகவல் கட்சியினரிடையே பரவி வந்தது.
இதை செந்தில் பாலாஜியும் மறுக்கவில்லை. இதற்கிடையே, கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளுக்கு தனது செல்போன் எண்ணை அனுப்பி, எதுவாக இருந்தாலும் தொடர்பு கொள்ள அவர் அறிவுறுத்தியது கோவையில் அவர் போட்டியிடுவதை மேலும் உறுதிப்படுத்தியது.
ஏனெனில், அதிமுக வலுவான வாக்கு வங்கி கொண்ட மாவட்டங்களில் கோவை முக்கியமானது. எனவே, கோவையில் எஸ்.பி.வேலுமணியையும், அதிமுகவையும் சமாளிக்கும் வகையிலும், சுணக்கமின்றி பிரச்சார களத்தில் திமுக முன்னிலையில் இருக்க வேண்டும் என்றால், செந்தில் பாலாஜி தான் சரியானவர் என கருதிய திமுக தலைமை, அவரை கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட அறிவுறுத்தியது.
செந்தில் பாலாஜி இங்கு போட்டியிட்டால், அவர் போட்டியிடும் தொகுதிகள் மட்டுமின்றி, கோவையில் உள்ள மற்ற தொகுதிகளின் பிரச்சாரங்களும் அவரது நேரடிக் கண்காணிப்பில் இருக்கும். வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் என்பதோடு, தேர்தல் பணிகளையும் சுணக்கமில்லாமல் அவர் பார்த்துக் கொள்வார் எனவும் திமுக தலைமை கருதியது.
இதை எல்லாம் கணக்கிட்டு, செந்தில் பாலாஜியை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுமாறு முதல்வர் ஸ்டாலினே, அறிவுறுத்தியதால் அவர் ஒப்புக் கொண்டார் எனவும், இனி கோவையில் திமுகவினரின் பிரச்சாரம் களைகட்டும் எனவும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம், செந்தில் பாலாஜியின் கோவை வருகை இருவேறு விமர்சனங்களை கிளப்பும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அதாவது, கடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, தோல்வி பயத்தில் கோவை தெற்கு தொகுதிக்கு இடம் பெயர்ந்துவிட்டார் என கரூரில் எதிர்கட்சியினரும். கோவை தெற்கில் வெளியூர் வேட்பாளரை திமுக களமிறக்கியுள்ளது. தேர்தல் முடிந்த பின்னர் அவர் வெளியூருக்கே சென்று விடுவார் என கோவையில் எதிர்கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.