

மதுரை: ‘‘ஓபிஎஸ் அண்ணே... இந்த நாடகம் எல்லாம் வேண்டாம். மக்கள் பார்த்து சலித்துப் போய்விட்டார்கள்’’ என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
மதுரை பெத்தானியாபுரம் ரேஷன் கடை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த செல்லூர் ராஜு, செய்தியாளர்களிடம் கூறியது: “ஓபிஎஸ் ஊடுசால் ஓட்டுகிறார். கட்சியில் சேருவதற்கு யாரிடம் கேட்க வேண்டும்? ஊடகம் மூலமாகவா கேட்பார்கள்? இவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக, முதலமைச்சராக இருந்துள்ளார். இவருக்கு கட்சியின் நிலைப்பாடு, கொள்கை தெரியும். இவர் ஊடகத்தில் பேசிப்பேசிதான் இப்படியாகிவிட்டார்.
ஓ.பன்னீர்செல்வத்தை நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். அண்ணே... இந்த நாடகம் எல்லாம் வேண்டாம். மக்கள் பார்த்து சலித்துப் போய்விட்டார்கள்.
கருணாநிதி போடாத நாடகமா? இன்று முதலமைச்சர் செய்யாத நாடகமா, ஒத்திகையா? ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி பேச வேண்டாம். விடுங்கள்.
விஜய்யை நாங்களாக திட்டவில்லை. எங்களை திட்டும்போது, தாக்கும்போது நாங்கள் திட்டாமல், தாக்காமல் இருக்க முடியுமா? அவர் அறையில் அமர்ந்து அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார். விஜய் தற்போது எங்களை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார். அதற்கு பிறகும் நாங்கள் அவரை பற்றி பேசுவது நல்லது இல்லை.
முதல்வர் ஸ்டாலின், பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று நினைக்கிறார். திமுகவை போல் தோல்வி கண்ட கட்சி கிடையாது. கருணாநிதி தனது பேச்சாற்றலாலும், கவிதை ஆற்றலாலும், கடிதங்கள் மூலமே அந்த இயக்கத்தை வளர்த்தார். அவர் அனைத்து தேர்தலிலும், கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவார். அப்படியிருந்தும் அந்தக் கட்சி பெரிய வெற்றி பெறவில்லை. செயலிழந்துதான் காணப்பட்டது
1991-ம் ஆண்டு கருணாநிதி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். அதன்பிறகு அந்த தொகுதியிலும் அவர் ராஜினாமா செய்தார். அதனால், தோல்வியை பற்றி திமுக பேசக் கூடாது. எம்ஜிஆரை ’நடிகனுக்கு நாடாள தெரியுமா?’ என்று கருணாநிதி கேட்டார். அப்படிப்பட்ட கருணாநிதியை தொடர்ந்து மூன்று தேர்தல்களில் தோல்வி அடையச் செய்து கோட்டை பக்கம் வர முடியாமல் செய்தவர் எம்ஜிஆர்.
மதுரையில் நான் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்துள்ளேன். ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புக்கும் மேல் பணிகள் நடந்துள்ளது. தற்போது திறக்கப்படும் பாலங்கள், அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கி திட்டமிடப்பட்டது. மதுரையில் இரு அமைச்சர்கள் ஐந்து ஆண்டுகளாகியும் எந்தப் பணிகளும் நடக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
அதிமுக வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை பாஜக கேட்டு நெருக்கடி கொடுப்பதாக சொல்வது உண்மையா? என்று என்று கேட்டதுக்கு, ‘‘அது குறித்த தகவல் உங்களுக்கு வந்திருக்கும். எங்களுக்கு வரவில்லை. உங்களுக்கு தனியாக மோடி, நயினார் நாகேந்திரன் சொல்லியிருப்பார்கள். அந்த அடிப்படையில் நீங்கள் கேட்லாம்.
அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறப் போகிறது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மக்கள் எதிர்ப்பு சுனாமி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். யார், எத்தனை பேர் திமுகவுடன் கூட்டணி அமைத்தாலும், இந்த சுனாமி எதிர்ப்பு அலையில் அடித்துச் செல்லப்படுவார்கள்’’ என்றார் செல்லூர் ராஜு.