

எ.வ.வேலு
சென்னை: “முதல்வர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது ஏன்? புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி அதற்கு காமராஜர் பெயர் வைத்தால், அதை நாங்களே வரவேற்றுப் பாராட்டுவோமே. முதல்வர் என்பது பொதுவானதுதானே?” என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “காமராஜருக்கு சென்னையில் சிலை அமைத்து பிரதமர் நேருவை அழைத்துவந்து திறந்து வைத்தோம். குடியாத்தம் தொகுதியில் காமராஜரை எதிர்த்து திமுக வேட்பாளரை நிறுத்தாதவர் அண்ணா. காமராஜருக்கு சிலை அமைத்து, மணிமண்டபம் அமைத்தவர் கருணாநிதிதான். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை ‘கல்வி வளர்ச்சி நாள்’-ஆக அறிவித்து பெருமை சேர்த்தார் கருணாநிதி.
‘முதல்வர் காலை உணவுத் திட்டம்’ பெயரை மாற்றியது ஏன்? புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி அதற்கு காமராஜர் பெயர் வைத்தால், அதை நாங்களே வரவேற்றுப் பாராட்டுவோமே. முதல்வர் என்பது பொதுவானதுதானே? ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் வைக்கலாம் எனக் கூறியபோது ஸ்டாலின் அதை மறுத்தார். “முதல்வர் காலை உணவுத் திட்டம் என பெயர் வைத்தால் யாரும் அந்தப் பெயரை மாற்ற மாட்டார்கள்,” என ஸ்டாலின் கூறினார்.
நாங்கள் உருவாக்கிய திட்டத்துக்கு நீங்கள் ஏன் பெயரை மாற்ற வேண்டும் என்பதே கேள்வி. சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வரை கருணாநிதியின் அடையாளம் இல்லாத ஊரே இல்லை. அரசு அதிகாரிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் செய்தவர்; பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்கியவர்; அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு நிகராக ஊதியத்தை உயர்த்தியவர் கருணாநிதி. காரல் மார்க்ஸுக்குச் சிலை வடித்த பெருமை திமுகவுக்கு உண்டு.
முதல்வர் அலுவலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? இந்த டெண்டரில் முறைகேடு உள்ளதாக நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. நாங்கள் தூய்மையானவர்கள் என்றீர்கள்; ஆனால், பணிகளைத் தொடங்கிய பிறகு இணையதளத்தில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக் கொள்கை விளக்கக் குறிப்பில் திமுக அறிவித்த திட்டங்களில் நிலுவையில் உள்ள திட்டங்கள் மட்டுமே உள்ளன. புதிய திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள நீங்கள், கடந்த மூன்று மாதங்களாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள கோவை பெரியார் நூலகத்தை ஏன் இன்னும் திறக்காமல் இருக்கிறீர்கள்? இப்பொழுது சட்டப்பேரவையில் இருக்கும் இந்த கலைநயத்தோடு கூடிய மேசைகளும், மைக்குகளும் திமுக ஆட்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நான் இரவு பகலாக பார்த்து பார்த்துச் செய்தது” இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், “அரசு திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதை பலர் சுட்டிக்காட்டுகிறார்கள். 1996-ல் திமுக ஆட்சி காலத்தில் ஜெ.ஜெ.சினி சிட்டி என்ற பெயர் எம்ஜிஆர் திரைப்பட நகர் என மாற்றப்படுவதாக கருணாநிதி அறிவித்தார்.
அம்மா பசுமை வீடு, கலைஞர் கனவு இல்லம் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அம்மா மருந்தகம் முதல்வர் மருந்தகம் என மாற்றப்பட்டது; அம்மா மினி கிளினிக் முதல்வர் கிளினிக் என மாற்றப்பட்டது. காலை உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயரைவிட பொருத்தமான பெயர் இருக்க முடியாது” என்று பதிலளித்தார்.