

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காரிலிருந்து இறங்கியபோது தவறி விழுந்த முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் (72) உயிரிழந்தார்.
காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர் காங்கிரஸ் சார்பில் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 1996-2001, 2006-11 ஆகிய 2 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், பின்னர் அவரிடமிருந்து பிரிந்து சென்றார். இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று வட்டாட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றார்.
அப்போது காரிலிருந்து இறங்கியபோது திடீரென தவறி கீழே விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீட்டுக்குச் சென்றார். ஆனால் திடீரென அவர் உயிரிழந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக கோட்டையூர் பாரி நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.