

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர்: “கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் இனாம் நில விவகாரம் தொடர்பாக குழு அமைப்போம் என்பதற்கெல்லாம் மக்கள் ஏமாறமாட்டார்கள்.” என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று (நவ. 22ம் தேதி) செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் வெண்ணெய்மலை கோயில் இனாம் நில விவகாரத்தில் 7 முறை கடைகள், வீடுகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்ததே மக்கள் இடங்கள் வாங்கி வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த வாரம் பேட்டியளித்த கரூர் எம்எல்ஏ, பேர் சொல்லாமல் ‘ஃப்ராடு, 420’ என்ற வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் பேசியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை பரப்பி வருகின்றனர்.
ஆள் கடத்தல், சொத்துக்கள் அபகரிப்பு, போலி மதுபானம் தயாரிப்பு, ஸ்பிரிட் கடத்தல், வேலை வாங்கி தருவதாகப் பணம் பெற்று மோசடி, 25,000 பேருக்கு இலவசமாக 3 சென்ட் நிலம் வழங்கி அதில் கான்கிரீட் வீடு கட்டி தருவதாகக் கூறியது, வெள்ளிக் கொலுசு எனக்கூறி கல் கொலுசு கொடுத்தது, 11 மணிக்கு ஆட்சிக்கு வந்தால் 11.05 மணிக்கு மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆற்றில் மணல் அள்ளலாம்... அதிகாரி தடுக்கமாட்டார்கள் தடுத்தால் அந்த அதிகாரி இருக்கமாட்டார் என ஏழை, எளிய மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்தது எனப் பல்வேறு பொய் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
அதேபோல், கரூர் வெண்ணெய்மலை கோயில் இனாம் நில விவகாரம் 2012-ம் ஆண்டு முதல் உள்ளது. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் பட்டா வழங்குவதாகக்கூறி மக்களின் வாக்குகளை பெற்றவர் தான் 420, ப்ராடு. அதிமுக ஆட்சியில் தான் வெண்ணெய்மலை கோயில் இனாம் நில விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்ததாக கூறுகிறார். தமிழ்நாடு முழுவதும் இனாம் நில விவகாரம் உள்ளது.
இதுதொடர்பாக முதலில் வழக்கு தொடர்ந்த போது 15 சர்வேக்கள் மட்டுமே காட்டப்பட்டன. இதுதொடர்பாக நீதிபதி இனாம் நிலங்களில் குடியிருப்பவர்கள் ஒரு தொகையை நிர்ணயம் செய்து கட்டிவிட உத்தரவி ட்டார்.
அப்போது 200 மனுதாரர்கள் இருந்தனர். இந்நிலையில் பணமே கட்டாமல் பட்டா தருவதாக தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நம்பி மக்கள் அதனை கைவிட்டுவிட்டனர். அதன்பின் கரோனா காலத்தில் நீதிமன்றம் செயல்படவில்லை. அதன்பிறகு தேர்தல் வந்துவிட்டது.
திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணனுக்கு நிதி உதவி செய்வதாக கூறுகிறார். நான் அவரை பார்த்தது கூட இல்லை. இதனை அவரே நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார்.
ஆவணங்களில் குளறுபடி என்பவர் அவற்றை சரி செய்திருக்கலாமே. நான்கரை ஆண்டுகளில் ஒண்ணே காலாண்டு புழலில் இருந்தவர் தனது கையாலாகாததனத்தை திசை திருப்பவே ஏதேதோ கூறி வருகிறார். அரசு இந்த விவகாரத்தை சரியான முறையில் கையாளவேண்டும். குழு அமைப்போம் என்பதற்கெல்லாம் மக்கள் ஏமாறமாட்டார்கள்.
கரூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மணல் குவாரிகள் செயல்படுகின்றன. இதன் மூலம் நாளொன்றுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள மணல் திருட்டு நடைபெறுகிறது. திமுக நிர்வாகிகள் இதற்கு பொறுப்பாளர்களாக இருந்த நிலையில் தற்போது முன்னாள் அமைச்சரின் பினாமியான ஒப்பந்ததாரர் அதற்கு பொறுப்பாக உள்ளார். 420 யார், ஃப்ராடு என்பது மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினாார்.