

சென்னை: தடை செய்யப்பட்ட குரங்கை கையில் வைத்து நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ தொடர்பாக மு.க.முத்து வீட்டில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளத்தில் குரங்கு குட்டி ஒன்றுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பதிவிட்டிருந்தார். விக்ரமின் முடியை பிடித்து குரங்கு சேட்டை செய்வது, அதனுடன் விக்ரம் கொஞ்சி மகிழும் காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இந்த குரங்கு லார் கிப்பன் எனப்படும் இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்டது என கூறப்படுகிறது. இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத் திருத்தத்தின்படி, சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட வெளிநாட்டு விலங்கினங்களை வணிக ரீதியாக வாங்குவதும், விற்பதும், வீடுகளில் வளர்ப்பதும் இந்தியாவில் சட்டவிரோதம்.
விக்ரமின் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கினார். தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள், இந்த குரங்கு நடிகர் விக்ரமுக்கு எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக விசாரணையைத் தொடங்கினர்.
விக்ரம் தனது மகள் வீட்டில் அந்த குரங்கை கொஞ்சியதாக தகவல் கிடைத்ததால், நீலாங்கரையில் விக்ரமின் மகள் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். விக்ரமின் மகள், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின், மூத்த மகன் மு.க.முத்து பேரனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
மகளை பார்க்க வந்த நடிகர் விக்ரம், அங்கு விற்பனைக்காக யாரோ கொண்டு வந்திருந்த, குரங்கை எடுத்து கொஞ்சியதும், அதை வீடியோவாக பதிவிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, தடை செய்யப்பட்ட குரங்கை விற்பனை செய்யும் நபர் உரிய ஆவணங்கள் வைத்துள்ளாரா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.