

சென்னை: “வெளிநாட்டு குடியுரிமை கொண்ட நபர்கள் முறைகேடாக வாக்களித்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியளிக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறை முழுமையான பாதுகாப்புடன் இல்லை என்பதை இந்த நிகழ்வு அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டுகிறது” என திமுக எம்.பி. வில்சன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், வெளிநாட்டு குடியுரிமை கொண்ட சுமார் 25 நபர்கள் முறைகேடாக வாக்களித்தது கண்டறியப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல் உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது.
தவறான அல்லது போலி ஆவணங்கள் மூலம் தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்று காட்டிக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது இவர்கள் தங்கள் பெயர்களைச் சேர்த்து, தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறை முழுமையான பாதுகாப்புடன் இல்லை என்பதை இந்த நிகழ்வு அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டுகிறது. இத்தகைய நிகழ்வுகள் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையையும், ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையையும் நேரடியாகப் பாதிக்கிறது.
வாக்கெடுப்புக்கு முன்னும் பின்னும் நடைபெறும் Immigration மற்றும் Emigration குறித்த தகவல்கள், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குடிவரவுப் பிரிவிடம் உள்ளதால், இந்த மிகப் பெரிய அளவிலான தேர்தல் மோசடி குறித்து சிபிஐ அமைப்பால் மட்டுமே விரிவான விசாரணையை மேற்கொள்ள முடியும்.
எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம், இது குறித்து சிபிஐ-யிடம் புகார் அளித்து, இந்த விவகாரத்தை முழுமையாக விசாரணை செய்ய வேண்டுமெனவும், இந்தியத் தேர்தலில் வாக்களித்த அந்த வெளிநாட்டு குடிமக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இந்தியத் தேர்தல் ஆணையம், வெளிநாட்டு குடிமக்கள் இந்தியாவில் வாக்களிப்பதைத் தடுக்க கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதுடன், அதற்கான வலுவான ஒழுங்குமுறைகளையும் உருவாக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
இந்திய நாட்டு குடிமக்கள் மட்டுமே இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க முடியும். வெளிநாடுகளில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதோடு, அந்த நாட்டு பிரஜையாகவும் மாறி குடியுரிமை பெற்று விட்டால் அவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட்டுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுவிடும். அப்படிப்பட்ட வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள், இந்தியாவுக்கு வழக்கம்போல் வந்து சென்று கொண்டிருக்கலாம். ஆனால், இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது.
இந்நிலையில்தான் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க, வெளிநாடுகளில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள், இங்கு வந்து சொந்தத் தொகுதியில் வாக்களித்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் சென்றது. அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ள குடியுரிமை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
வெளிநாடுகளுக்குச் செல்ல விமான நிலையம் வரும் பயணிகளின் கை விரல்களைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. வாக்களித்த அடையாள மை இருந்து, அவர்கள் வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமை பெற்ற பயணியாக இருந்தால், அவர்களை விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டாம்.
அவர்களின் விமானப் பயணங்களை ரத்துசெய்து, அவர்களை காவல் நிலையங்களில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி வெளிநாடு செல்ல சென்னை விமான நிலையம் வந்த சில வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்குமாறாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துள்ளது தெரியவந்தது.
அவர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்துள்ளனர். அதேபோல தமிழகத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனையிலும் பலர் சிக்கியுள்ளனர். இப்படி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் சுமார் 17 பேர் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குடியுரிமைகள் பெற்றவர்கள் என்று தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தாலும் நடந்து முடிந்த எஸ்ஐஆர் பணிகளில் இவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று வாக்களித்ததாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.