

காங்கிரஸ் சார்பில் 'உதவும் கை' என்ற வெள்ள நிவாரண உதவி மையத்தை மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் நேற்று திறந்து வைத்தார். உடன் அமைச்சர் செ.ராஜேஷ்குமார், மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், பொருளாளர் ரூபி மனோகரன், பொதுச் செயலாளர் சிரஞ்சீவி உள்ளிட்டோர். | படம்: ம.பிரபு |
சென்னை: மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை சத்யமூர்த்தி பவனில் 24 மணி நேரமும் இயங்கும் ‘உதவும் கை’ என்ற வெள்ள நிவாரண உதவி மையத்தை கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும், ஒவ்வொரு வார்டுக்கும் 3 பேரைக் கொண்ட வெள்ள நிவாரண உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக மக்களுக்கு உதவுவார்கள்.
நிவாரணப் பணிகளுக்கு தேவையான குடிநீர், உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாராக இருக்கும் வகையில் இந்நிவாரண மையம் செயல்படும்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக 2 படகுகள் உள்பட பல்வேறு விதமான நிவாரண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இக்குழுவின் தலைவராக சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் செயல்டுவார்.
நிவாரணப் பணிகளை களத்திலிருந்து முழுவீச்சில் செயல்படுத்த இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் செயல்படுவார். காங்கிரஸ் உதவி மையத்தை தொடர்பு கொள்ள 7871004668 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவும் உள்ளங்கள் இந்த மையத்துக்கு பொருளுதவியும் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.