

குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படும் கொடிவேரி தடுப்பணை அருவி.
ஈரோடு: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.55 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 56,672 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளநீர் செல்வதால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொடிவேரியில் குளிக்கத் தடை: கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் வெள்ளநீர் அபாயக் கட்டத்தைத் தாண்டி பாய்ந்து செல்கிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் சுற்றுலாப் பயணிகள் தடுப்பணையில் குளிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்புப் பலகையும் தடுப்பணை நுழைவுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளான நேற்று, கொடிவேரி தடுப்பணைக்கு குளிப்பதற்காக வந்த சுற்றுலாப் பயணிகள், தடை காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.