

சென்னை: மெரினா கடற்கரையில் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடம் அருகே வெல்டிங் வைத்து கன்டெய்னரை அகற்றும்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சென்னையில் நடைபெற்றுவரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் முக்கியமானதாகும். இந்தத் தடத்தில் மெரினா கடற்கரை அருகே கலங்கரை விளக்கம் முக்கியமான பகுதியாகும்.
இங்கு, அதாவது சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரே அணுகு சாலையில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக சாலையோரத்தில் கன்டெய்னர் பெட்டி வடிவில் தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த கன்டெய்னர் அலுவலகம் பழுதடைந்து பராமரிப்பின்றி இருந்த நிலையில், அதனை அகற்றும் பணியில் மெட்ரோ பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்காக வெல்டிங் இயந்திரம் மூலம் கன்டெய்னர் பெட்டியை உடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, ஏற்பட்ட தீ பொறி, கன்டெய்னரின் தரைப்பகுதியில் அதிகளவில் கிடந்த மரச்சாமான்களில் விழுந்து தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி, கன்டெய்னர் பெட்டி முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது.
இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியது. சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் புகை மற்றும் தீயைக் கண்டு பதற்றமடைந்து ஓடினர்.
இது குறித்து, உடனடியாக தீயணைப்புத் துறைக்கு மதியம் 2.50 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து 20 நிமிடத்துக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஏற்கெனவே பழுதடைந்து, பராமரிப்பின்றி கிடந்த கண்டெய்னர் என்பதால், அதன் உள்ளே எந்தப் பொருட்களும் இல்லை என்றும், சம்பவத்தின்போது கண்டெய்னருக்குள் யாரும் இல்லை என்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து, மெரினா சர்வீஸ் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.