

சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவலுக்கு 2 ஆண்டுகள் கால தாமதமாக பதிலளித்த ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பரத்வாஜ் என்ற மாணவர் தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் கடந்த 2022 மார்ச் மாதம் நடந்த தேர்வில் பங்கேற்று எழுதியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட ஒரு தேர்வில் அவர் பங்கேற்கவில்லை எனக்கூறி அவருடைய சான்றிதழ் திருப்பி வழங்கப்படவில்லை.
அதையடுத்து அந்த தேர்வில் தான் பங்கேற்று எழுதியதாகவும், எனவே தனது சான்றிதழ்களை திருப்பி வழங்க வேண்டுமென்றும், இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கக் கோரியும் பரத்வாஜ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் தனது விண்ணப்பம் மீது 2 ஆண்டுகளாக எந்த தகவலும் அளிக்கப்படவில்லை எனக்கூறி பரத்வாஜ் மாநில தகவல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கும், விளக்கங்களுக்கும் 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.
ஆனால் தனது மனு மீது 2 ஆண்டுகளாக எந்த பதிலும் வழங்கப்படவில்லை என்பதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், தனது கல்வி சான்றிதழ்களை விடுவி்க்கவும் உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை மாநில தகவல் ஆணையர் ஆர்.பிரியாகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பொது தகவல் அலுவலர் நேரில் ஆஜராகி, மனுதாரர் அளித்த விண்ணப்பம் தங்களுக்கு கிடைக்கவில்லை.
மாநில தகவல் ஆணையம் அனுப்பிய சம்மன் அடிப்படையில் மனுதாரர் கோரிய தகவல்கள் அவருக்கு வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். அந்த விளக்கத்தை ஏற்க மறுத்த மாநில தகவல் ஆணையர், ``தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கமே தகவல்கள் எந்த ஒளிவு, மறைவுமின்றி வெளிப்படைத் தன்மையுடன் மனுதாரர்களுக்கு 30 நாட்களுக்குள் கிடைக்க வேண்டுமென்பதுதான்.
ஆனால் மனுதாரர் கோரிய மனுவுக்கு 2 ஆண்டுகள் கழித்து பதிலளிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக நிர்வாகம் ரூ.10 ஆயிரத்தை 20 நாட்களுக்குள் இழப்பீடாக வழங்க வேண்டும்.
அத்துடன் ஆசிரியர் பயிற்சி மாணவர் பரத்வாஜின் கல்வி சான்றிதழ்களை ஒரு வார காலத்துக்குள் திருப்பி கொடுக்க வேண்டும். இழப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கியது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் மே 22-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளார்.