

உள்ளாட்சி நிர்வாகம், நிதி நிலையை மேம்படுத்துதல் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் மாநில நிதி ஆணைய தலைவர் அலாவுதீன், அரசுத் துறைச் செயலர்கள் ககன்தீப் சிங் பேடி, தர்மேந்திர பிரதாப் யாதவ், தேசிய பொது நிதி, கொள்கை நிறுவன முன்னாள் இயக்குநர் கோவிந்தராவ், கேரள முன்னாள் தலைமைச் செயலர் விஜயானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: ம.பிரபு
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பகிர்வு தொடர்பான பரிந்துரை டிசம்பர் மாதத்துக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மாநில நிதி ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 7-வது மாநில நிதி ஆணையம் மற்றும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் மற்றும் நிதி நிலையை மேம்படுத்துதல் தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கம் அரும்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
ஆணையத்தின் தலைவர் கே.அலாவுதீன் தலைமையில் நடந்த கருத்தரங்கில், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் எம்.கோவிந்த ராவ், கேரள முன்னாள் தலைமைச் செயலர் எஸ்.எம்.விஜயானந்த் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துக்களை முன்வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கே.அலாவுதீன் கூறியதாவது: தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான 7-வது மாநில நிதி ஆணையம் அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
மாநில அரசின் நிதியிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த அளவுக்கு நிதிப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும், உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் சொந்த நிதி ஆதாரங்களை எவ்வாறு பெருக்கிக் கொள்வது மற்றும் பொதுமக்களுக்கான சேவை வழங்கும் திறனை எவ்வாறு மேம்படுத்துவது ஆகிய 3 முக்கிய அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
இதுதொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் அதிகாரிகளுடனும், மக்கள் பிரதிநிதிகளுடனும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களின் உள்ளாட்சி நிர்வாக நடைமுறைகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.
இதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெற்று வரும் இக்கருத்தரங்கில் பெறப்படும் ஆலோசனைகளையும் உள்வாங்கி, டிசம்பருக்குள் பரிந்துரை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் எம்.சுரேஷ் பாபு, ஆணையத்தின் இணை செயலர் வி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.