

சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் காலியாக உள்ள துணைத் தலைவர்உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் 6 மாதங்களில் நிரப்பவேண்டுமென மத்தியஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கறிஞர் கே.பாலு கடந்த 2022-ல் தாக்கல் செய்த மனுவில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022-ம் ஆண்டுபிப்ரவரி மாதத்துடன் காலாவதியாகிவிட்ட பின்னரும் அந்த பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன.
இது அரசியலமைப்புச் சட்ட ரீதியிலான உரிமைகளுக்கு எதிரானது. எனவே ஆணையத்தில்காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் நிரப்ப மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் கிளைகளை மாநில அளவில் அல்லது மண்டல அளவில் புதிதாக அமைக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் வாதிடும்போது, “தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டு விட்டனர்.
துணைத் தலைவர் உள்ளிட்ட இதர இடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப்பதவிகளும் விரைவில் நிரப்பப்படும் என்றார். அதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நிரப்பப்படாமல் காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் 6 மாத காலத்துக்குள் நிரப்பவேண்டும். ஒருவேளை அதற்குள் நிரப்பாவிட்டால் இந்தவழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.