யூரியாவுடன் இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்கும் நிறுவனங்கள் - உரக்கடை சில்லறை வியாபாரிகள் தவிப்பு

யூரியாவுடன் இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்கும் நிறுவனங்கள் - உரக்கடை சில்லறை வியாபாரிகள் தவிப்பு
Updated on
1 min read

மயிலாடுதுறை: டெல்டா மாவட்டங்களில் யூரியாவுடன் இணைப் பொருட்களை கட்டாயப்படுத்தி நிறுவனங்கள் விற்பனை செய்வதால், உரக்கடை சில்லறை வியாபாரிகள் தவிக்கின்றனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் பிரதானமாக நெல் சாகுபடியும், அதற்கடுத்து கரும்பு, பருத்தி, வாழை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியும் நடைபெறுகின்றன.

இந்த அனைத்து பயிர்களின் வளர்ச்சிக்கும் யூரியா உரம் பயன்படுத்துவது கட்டாயமாக உள்ளது. இந்நிலையில், உரங்களின் விலையை மத்திய அரசு ஆண்டுதோறும் ஏற்றிவருவதுடன், டிஏபி, பொட்டாஷ் போன்ற உரங்களைவிட பல மடங்கு அதிகளவு மானியத்தை யூரியாவுக்கு வழங்கி வருகிறது.

இதனால், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.266 என்ற அளவில் 2018-ம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

விவசாயத்துக்கு மட்டுமின்றி பல்வேறு தொழிற்சாலைகளில் மூலப் பொருளாகவும் யூரியா பயன்படுத்தப்படுவதால், பயோமெட்ரிக் முறையில் ஓர் ஆதார் எண்ணுக்கு 10 மூட்டைகளுக்கு மேல் யூரியா பெற முடியாத வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து யூரியா விற்பனையை மத்திய அரசு செய்து வருகிறது.

இந்நிலையில், ஒரு டன் யூரியாவுக்கு இணை பொருளாக ஒரு டன் நுண்ணூட்ட உரங்களையும் வாங்கினால் மட்டுமே யூரியா விற்பனை செய்யப்படும் என வியாபாரிகளிடம் யூரியா உற்பத்தி நிறுவனங்கள் வற்புறுத்துகின்றன். வேறு வழியின்றி அந்த நுண்ணூட்ட உரங்களை வாங்கும் வியாபாரிகள், அதை விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக விற்பனை செய்கின்றனர்.

இதனால், விவசாயிகளுக்கும், உரக்கடை விற்பனையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதால், பல சில்லறை வியாபாரிகள் யூரியா உர விற்பனையையே தவிர்த்து வருகின்றனர்.

இதுகுறித்து உர விற்பனையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியது: ஒரு டன் யூரியா ரூ.5,775, லாரி வாடகை ரூ.450, கூலி ரூ.75 என ரூ.6,300 செலவாகிறது. இதன்படி, ஒரு மூட்டை விலை ரூ.283. ஆனால், அதன் எம்ஆர்பி ரூ.266. இதுபோக, ஒரு டன் யூரியாவுக்கு திணிக்கப்படும் நுண்ணூட்ட உரத்தின் விலை ரூ.4,000.

எனவே, ஒரு டன் யூரியா வாங்க ரூ.10,300, அதாவது ஒரு மூட்டைக்கு ரூ.464 செலவாகிறது. இதேபோல, டிஏபி உரத்துக்கும் ஒரு டன்னுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பில் நுண்ணூட்டங்கள் வியாபாரிகளிடம் வற்புறுத்தி விற்பனை செய்யப்படுகின்றன.

அதை வாங்க விவசாயிகள் மறுக்கும்போது, வாக்குவாதங்கள் ஏற்படுவதுடன், வியாபாரிகள் நஷ்டம் அடையும் சூழலும் ஏற்படுகிறது. தமிழக அரசிடம் இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் இதுவரை இருந்த அரசுகள் கண்டுகொள்ளவில்லை.

தற்போது புதிதாக பொறுப்பேற்றிற்கும் தவெக அரசு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக மட்டுமே யூரியா விற்பனையை மேற்கொண்டால்தான், இணை பொருட்கள் இல்லாமல் விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி யூரியா உரம் கிடைப்பதை உறுதிசெய்ய இயலும். இவ்வாறு அவர் கூறினார்.

யூரியாவுடன் இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்கும் நிறுவனங்கள் - உரக்கடை சில்லறை வியாபாரிகள் தவிப்பு
டி.கே.சிவகுமாரின் ‘பவர்’ ஸ்டோரி! - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in