

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 7-ம் தேதி முதல் கிடைக்கும். அதேபோல் பிப்ரவரி முதல் முதியோர் உதவித் தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலம் மாஹே பிராந்தியம் பள்ளூரில் உள்ள சுகாதார மையம் கடந்த 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1970-ம் ஆண்டில் இங்கு மகப்பேறு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டு, அதன் பின்னர் மக்களின் தேவைக்கேற்ப படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்த மருத்துவமனையில் ரூ.12 கோடியே 75 லட்சம் செலவில் 50 படுக்கைகள் கொண்ட 4 மாடி உள்நோயாளிகள் பிரிவு கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.
விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் காணொலி மூலம் கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடத்தி அடிக்கல் நாட்டி வைத்தனர். இந்த கட்டிடம் ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் காணொலி மூலம் முதல்வர் ரங்கசாமி பேசியது: “தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனையோ நலத்திட்டங்கள் கொண்டு வந்து முடித்துள்ளது. முதியோர் உதவித் தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்பட உள்ளது. வரும் பிப்ரவரி முதல் உயர்த்தப்பட்ட உதவித்தொகை கிடைக்கும்.
குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ. 2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 7-ம் தேதி முதல் கிடைக்கும். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கல் வீடு கட்டும் திட்டம் மத்திய அரசின் நிதி உதவி சேர்த்து ரூ.5 லட்சமாக உயர்த்தி முதல் தவணை விரைவில் வழங்கப்பட உள்ளது. கல்வி உதவித் தொகை ரூ.27 கோடி வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படித்தோருக்கு அனைத்து கல்லூரி படிப்புகளிலும் 10 சதவீத இடஒதுக்கீடு தரப்படும்.
லேப்டாப் வழங்கப்படாமல் இருந்தது. விரைவில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கான லேப்டாப் 15 நாட்களுக்குள் தரப்படும்.
அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. சுமார் 4 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. தற்போது கூட தொடக்கப்பள்ளி ஆசிரியர், செவிலியர், வருவாய்துறை, சுகாதாரத்துறை பணியிடங்களுக்கு பணி ஆணை விரைவில் வழங்கப்படும்” என்றார்.