பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 2 மாதமாகியும் நகைகள் திரும்ப தரப்படாததால் விவசாயிகள் கவலை

பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 2 மாதமாகியும் நகைகள் திரும்ப தரப்படாததால் விவசாயிகள் கவலை
Updated on
1 min read

கோவில்பட்டி: பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 2 மாதங்களாகியும் நகைகள் திரும்ப தரப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2025-26-ம் ஆண்டு புரட்டாசி ராபி பருவத்தில், மானாவாரி நிலங்களில் சிறுதானியங்கள், பயறு வகைகள், பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் பணப்பயிர்கள் ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். அப்போது, பயிர்களில் கதிர்கள் மணிப்பிடிக்கும் தருவாயில் மழை பெய்யாததாலும், நிலங்களில் போதிய ஈரப்பதம் இல்லாததாலும், எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர்.

தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததும், பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டது. அறிவிப்பு வெளியாகி இரண்டு மாதங்களான நிலையில், பயிர்க்கடனுக்காக வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள், விவசாயிகளுக்கு இதுவரை திரும்ப வழங்கப்படவில்லை.

இதுகுறித்து, கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, பாதிப்புக்கு ஏற்றவாறு பயிர்காப்பீடு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு சராசரி விளைச்சலைவிட கூடுதலாக விளைச்சல் கிடைத்துள்ளது என, தவறான புள்ளி விவரத்தை தெரிவித்து, இழப்பீடு கிடையாது என, பயிர்காப்பீட்டு நிறுவனம் கூறிவிட்டது.

வங்கிகளில் பயிர் அடங்கல் மற்றும் நகை அடமானம் மூலமாக பலரும் பயிர்க்கடன் பெற்றுள்ளனர். தமிழக அரசு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டு, 2 மாதங்களாகும் நிலையில், விவசாயிகளுக்கு கடனில்லா சான்று வழங்கப்படவில்லை. மேலும், பயிர்க்கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட நகையும் விவசாயிகளுக்கு திருப்பி வழங்கப்படவில்லை.

இதுகுறித்து, கூட்டுறவு சங்க செயலாளர்களிடம் கேட்டால், அரசிடம் இருந்து விவசாயிகளின் நகைகளை திருப்பித்தர தமிழக அரசின் உத்தரவு வரவில்லை என கைவிரித்துவிட்டனர். அடுத்த பருவ காலம் இன்னும் 20 நாட்களில் தொடங்க உள்ளது. மீண்டும் பயிர்க்கடன் பெற நகைகளை அடமானம் வைக்க வேண்டி உள்ளது.

எனவே, பயிர்க்கடன் தள்ளுபடியில் பயனடைந்த விவசாயிகள் பட்டியலை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், வங்கி விளம்பர பலகையில் ஒட்ட வேண்டும். அடமான நகைகளை உடனே திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் சிலரிடம் கேட்டபோது, “பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு, அவர்களது அடமான நகைகளை திரும்ப வழங்குவது குறித்த உத்தரவு, இதுவரை அரசிடமிருந்து வரவில்லை. உத்தரவு வந்தால்தான் விவசாயிகளிடம் நகைகளை திரும்ப வழங்க முடியும்” என்றனர்.

பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 2 மாதமாகியும் நகைகள் திரும்ப தரப்படாததால் விவசாயிகள் கவலை
வட மாநில கொள்ளையர் அட்டகாசத்தை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதா? - அரசுக்கு அன்புமணி கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in