

அரூர் அருகேயுள்ள தாதரவலசை பகுதியில் பிளாஸ்டிக் மூடாக்கு அமைத்து வளர்க்கப்படும் தக்காளி செடிகள்
அரூர்: அரூர் பகுதியில் தண்ணீர் மற்றும் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் தக்காளி, மஞ்சள் உள்ளிட்டப் பயிர்களுக்கு பிளாஸ்டிக் மூடாக்கு அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தின் சராசரி மழையளவில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தின் முக்கிய தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி, தக்காளி மற்றும் மலர் பயிர்கள் அதிக வறட்சியால் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. மேலும், வயல்களில் முளைக்கும் களைகளை வெட்டி அகற்ற தொழிலாளர்கள் பற்றாக்குறையும் அதிகமாக உள்ளது.
இதனால், விவசாயிகள் பிளாஸ்டிக் மூடாக்கு அமைத்து அதில் தக்காளி மற்றும் மஞ்சள் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர். சில இடங்களில் மரவள்ளிக் கிழங்கும் மூடாக்கு முறையில் பயிரிடத் தொடங்கியுள்ளனர்.
விவசாய நிலத்தில் மண் வளம், ஈரப்பதம் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்த இம்முறை உதவும் என்பதால், அரூர் வட்டத்தில் கீரைப்பட்டி, தாதரவலசை, தென்கரைக்கோட்டை, புதுப்பட்டி, வாச்சாத்தி, அச்சல்வாடி, தாதம்பட்டி, கொக்கராப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் மோளையானுர், மெணசி, பூதநத்தம் உள்ளிட்டப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் தற்போது விவசாயிகள் பிளாஸ்டிக் மூடாக்கு அமைத்து பயிர் செய்துள்ளனர்.
இதுகுறித்து தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது; அரூர் மற்றும் பாப்பிரெட்டிப் பட்டி வட்டத்தில் தர்பூசணி, தக்காளி, மிளகாய், கத்தரி, பப்பாளி போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு இந்த பிளாஸ்டிக் மூடாக்கு முறை மிகச் சிறந்த லாபத்தைத் தருகிறது.
இம்முறையால், தக்காளியைத் தாக்கும் வெள்ளை ஈ மற்றும் இலைப்பேன் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளை வெள்ளை நிற மூடாக்குத் தாள் சூரிய ஒளியை எதிரொலிப்பதன் மூலம் விரட்டுகிறது. மழைத்துளிகள் மண்ணில் பட்டு தக்காளி இலைகளில் தெரிப்பதைத் தடுப்பதால், தக்காளிக்கு வரும் 'ஏர்லி பிளைட்' போன்ற பூஞ்சாண நோய்கள் குறைகின்றன.
அதேபோல் மஞ்சள் பயிர் சாகுபடிக்கு மூடாக்கு அமைப்பதன் மூலம் களைகளை 100 சதவீதம் கட்டுப்படுத்துகிறது.
மூடாக்கின் கீழ் மண் இறுகாமல், ஈரப்பதத்துடன் இருப்பதால் கிழங்குகள் நன்கு பருத்து, அதிக எடையுடன் வளரும் வாய்ப்புள்ளது. முக்கியமாக செடிகளை சுற்றி பரந்து வளரும் களைகளை கட்டுப் படுத்துவதன் மூலம் களையெடுக்க கூலித்தொழிலாளர்களை எதிர்பார்க்கத் தேவையில்லை என்பதால் சமீபகாலமாக இதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தனர்.