

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நெல் கொள்முதல் ஈடுபட்ட தனியார் வியாபாரிகள் வாங்கி நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றிய தொழிலாளர்கள்.
தஞ்சாவூர்: அரிசி விலை உயர்வு காரணமாக தனியார் வியாபாரிகள், டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் இருந்து இதுவரை 2 ஆயிரம் லாரி நெல்லை வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்து வருகிறது. அதன்படி, இந்தாண்டு குறுவை பருவத்தில் 416 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு குறுவை பருவத்தில் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதில், தற்போது 60 சதவீதம் அறுவடைப் பணிகள் முடிந்துள்ளன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தனியார் வியாபாரிகள் வயலுக்கே சென்று விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறனர். அவர்கள், நெல்லை தூசி இல்லாமல், எவ்வளவு ஈரப்பதமாக இருந்தாலும் வாங்கிக் கொள்வதாலும், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை கொண்டு செல்லும் செலவு, அங்கு மூட்டைக்கு ரூ.50 லஞ்சம், ஒரு மூட்டைக்கு ஒன்றரை கிலோ கூடுதல் எடை பிடித்துக் கொள்வது போன்றவற்றை தவிர்க்கலாம் என்பதாலும் விவசாயிகள் தனியாரிடம் விற்க ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும், ஏறத்தாழ நெல் கொள்முதல் நிலையத்தில் வாங்கும் விலையையொட்டி, அதாவது கொள்முதல் நிலையத்தில் கிலோ ரூ.26.50-க்கு கொள்முதல் செய்யும் நிலையில், தனியார் வியாபாரிகளும் கிலோ ரூ.25 வரை கொள்முதல் செய்கின்றனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் கூட்டியக்க மாநில தலைவர் கக்கரை ஆர்.சுகுமாறன் கூறியது: அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால், ஈரப்பதம் அதிகமாக உள்ளது, லாரி வரவில்லை, ஒருநாளைக்கு 600 மூட்டை மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்பன போன்ற பல்வேறு காரணங்களை கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறி விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர்.
அதேநேரத்தில், அரிசி விலை உயர்வால் தனியார் வியாபாரிகள் இந்தாண்டு நெல் கொள்முதலில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கர்நாடகாவில் நெல் மகசூல் குறைந்ததால், டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யும் நெல்லை, கர்நாடகாவுக்கும், ஆரணி பகுதியில் உள்ள தனியார் நெல் அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
விலை சற்றே குறைவாக இருந்தாலும், நடைமுறை செலவுகள், அலைக்கழிப்பு போன்றவற்றால் தனியாரிடம் விற்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார்.
இதுகுறித்து தனியார் நெல் மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் கூறியது: கர்நாடக மாநிலத்தில் நெல் சாகுபடி குறைந்த காரணத்தால், தற்போது அரிசி விலை உயர்ந்துள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களின் நெல்லை லாரிகளில் வாங்கி அங்கு அனுப்புகிறோம்.
குறுவை பருவத்தில் இதுவரை டெல்டா மாவட்டங்களிலிருந்து 2 ஆயிரம் லாரி நெல் மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்கும், கர்நாடகத்துக்கும் அனுப்பி வைத்துள்ளோம். கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் விலைக்கு நிகராக நாங்கள் நெல்லை வாங்குவதால், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு கூறினர்.