

மதுரை தல்லாகுளம் நீர்வளத்துறை மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் இன்று தென் மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் எம்.அர்ச்சுணன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
படம்: நா.தங்கரத்தினம்
மதுரை: காவிரி - வைகை - கிருதுமால் குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.2,000 கோடி நிதியை ஒதுக்கி தமிழக முதல்வர் அறிவிக்கக் கோரி தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் இன்று மதுரை தல்லாகுளம் நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென் தமிழகத்தில் 7 மாவட்ட மக்களின் 8 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் காவிரி - வைகை - கிருதுமால் குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக் கோரி 50 ஆண்டாக விவசாயிகள் போராடினர். அதனையொட்டி, 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி அதிமுக ஆட்சியில் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையிலிருந்து புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறு வரை 118 கி.மீ தூரம் முதல் கட்டம், தெற்கு வெள்ளாற்றில் இருந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆறு வரை 108 கி.மீ தூரம் 2-வது கட்டம், வைகை ஆற்றிலிருந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கிருஷ்ணாபுரம் புதுப்பட்டி கிராமம் குண்டாறு வரை 36 கி.மீ தூரம் மூன்றாவது கட்டம் என ஆக மொத்தம் 262 கி.மீ தூரம் கால்வாய் வெட்டுவதற்கு முடிவானது.
அதன்படி 10 கி.மீ தூரம் கால்வாய் வெட்டும் பணியும் முடிந்துள்ளது. அடுத்த வந்த திமுக ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு நடப்பு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு ரூ.150 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வரை வலியுறுத்தி தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.அர்ச்சுணன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்பு மண்டல தலைமைப் பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்ற தலைமை பொறியாளர் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் அர்ச்சுணன் கூறுகையில், “காவிரி - வைகை - கிருதுமால் குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு 2021-ல் ரூ.14,000 கோடி இருந்த ஒட்டுமொத்த திட்ட மதிப்பீடு தற்போது ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. முதல் கட்டத்துக்கு சுமார் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு தேவைப்படும் நிலையில் தற்போது ரூ.150 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியில் 5 கி.மீ தூரம் மட்டுமே கால்வாய் வெட்டும் பணியை செய்ய முடியும். எனவே, தமிழக முதல்வர் 7 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.2000 கோடி நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும்” என்றார்.