

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் தாராசுரத்தில் 2-ம் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட, அடிக்கு 1008 சிற்பங்கள் உடைய ஐராவதீஸ்வரர் கோயிலில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அவரது மனைவி சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் உள்ள மூலவரை தரிசனம் செய்த அவர்கள் கோயிலைச் சுற்றி உள்ள கலைநயத்துடன் நுணுக்கம் மிகுந்த சிற்பங்களை பார்வையிட்டு அதன் விளக்கத்தை கேட்டறிந்தனர். பின்னர் கோயில் வெளி பிரகாரத்தில் மழைக்காலங்களில் நீர் தேங்கக் கூடிய பகுதியை பார்வையிட்டார்.
அப்போது தொல்லியல் துறை அதிகாரிகள் மழை நீர் தேங்காதவாறு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். இதையடுத்து சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் தரிசனம் மேற்கொண்ட அவர் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டுச் சென்றார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 2-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.