சிவகங்கை, காரைக்குடி தொகுதிகளை விட்டுக் கொடுப்பது யார்? - தே.ஜ.கூட்டணியில் அமமுக இணைந்ததால் எதிர்பார்ப்பு

சிவகங்கை, காரைக்குடி தொகுதிகளை விட்டுக் கொடுப்பது யார்? - தே.ஜ.கூட்டணியில் அமமுக இணைந்ததால் எதிர்பார்ப்பு
Updated on
2 min read

காரைக்குடி: தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்ததால் சிவகங்கை, காரைக்குடி தொகுதி களை விட்டுக்கொடுப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 2021 தேர்தலில் காரைக்குடியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் ஹெச்.ராஜாவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாங்குடி, அமமுக சார்பில் தேர்போகிபாண்டி போட்டியிட்டனர்.

மாங்குடி 75,954 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கு அடுத்தபடியாக, ஹெச்.ராஜா 54,365 வாக்குகள், தேர்போகி பாண்டி 44,864 வாக்குகள் பெற்றனர். கடந்த 2024 எம்பி தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2-வது இடம் பிடித்தது.

இதனால் இந்த தேர்தலில் காரைக்குடி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென பாஜக எதிர்பார்க்கிறது. சிவகங்கை தொகுதியில் அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் சிட்டிங் எம்எல்ஏவாக இருப்பதால், காரைக்குடியை குறி வைத்து பாஜக ஏற்கெனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.

அதேசமயத்தில் கடந்த மாதம் தேவகோட்டை வந்த டி.டி.வி.தினகரன் இந்த முறை கட்டாயம் காரைக்குடியில் அமமுக சார்பில் தேர்போகி பாண்டி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என அறிவித்தார். இந்நிலையில் நேற்று அதிமுக, பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது.

அக்கட்சிக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என்பதால், கட்டாயம் காரைக்குடி கிடைக்கும் என அக்கட்சியினர் தற்போதே கூறத் தொடங்கியுள்ளனர். கடந்த சில தேர்தல்களாக தொடர்ந்து காரைக்குடியில் பாஜக போட்டியிட்டு வரும் நிலையில், அத்தொகுதியை விட்டுக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அப்படியே விட்டுக்கொடுத் தாலும், அதற்கு அடுத்ததாக சிவகங்கை தொகுதியை கேட்கும். ஆனால் ஏற்கெனவே சிவகங்கையில் சிட்டிங் எம்எல்ஏவாக செந்தில்நாதன் இருப்பதால், பாஜக கோரிக் கையை அதிமுக ஏற்குமா? என்பது கேள்விக்குறியே.

கடந்த 2021 தேர்தலில் சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 3 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டு சிவகங்கையில் மட்டும் வெற்றி பெற்றது. இதில் திருப்பத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4 முறை வென்ற அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏவாக உள்ளார்.

அவரை எதிர்த்து பலமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த முறையும் அதிமுகவே போட்டியிடும் என கூறப்படுகிறது. அதேபோல் அதிமுக கோட்டையாக கருதப்பட்டு, கடந்த முறை திமுக விடம் இழந்த மானாமதுரையை இந்த முறையும் அதிமுக விட்டுக் கொடுக்காது என கூறப்படுகிறது.

பாஜக, அமமுக கட்சி களும் திருப்பத்தூர், மானா மதுரை தொகுதிகளை விரும்பவில்லை. இதனால் காரைக்குடி, சிவகங்கையை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, மானாமதுரை, திருப்பத்தூர் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் அதிமுக போட்டியிடுமா? தாங்கள் வெற்றி பெற்ற சிவகங்கை தொகுதியை சிட்டிங் எம்எல்ஏ செந்தில்நாதனோ, அதிமுகவோ கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பார்களா என்ற கேள்வி சம்பந்தப்பட்ட கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை, காரைக்குடி தொகுதிகளை விட்டுக் கொடுப்பது யார்? - தே.ஜ.கூட்டணியில் அமமுக இணைந்ததால் எதிர்பார்ப்பு
கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்த மாட்டோம்: ட்ரம்ப்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in