

பேரவைத் தலைவர் அப்பாவு | கோப்புப்படம்
நெல்லை: “சினிமாவில் வருவதுபோன்ற கற்பனைகளை அரசியலில் மக்கள் ஏற்க மாட்டார்கள். விஜய் பேசுவதெல்லாம் ஒரு கற்பனை கலந்த நடிப்பு என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அண்ணா நினைவு நாளையொட்டி நடைபெற்ற சமபந்தியில் பங்கேற்ற சட்டப் பேரவை தலைவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளன.
துணைவேந்தர் தேடுதல் குழு அமைப்பதில் மாநில அரசின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். இதில் யு.ஜி.சி தலையிடத் தேவையில்லை என்று நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன. ஆனால், தமிழக ஆளுநர் வேண்டுமென்றே வஞ்சிக்கின்ற மனப்பான்மையோடு செயல்படுகிறார். சீன எல்லை விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு உண்மை நிலவரத்தை சொல்ல வேண்டியது பிரதமரின் கடமை. மீனவர்கள் கைது மற்றும் அண்டை நாடுகளுடனான உறவு ஆகியவற்றில் இந்தியாவின் மதிப்பு குறைந்து வருகிறது.
அமெரிக்காவில் அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மிகப் பெரியது. கிரீன் எனர்ஜி திட்டங்களுக்காக 10 சதவீதம் லஞ்சம் கொடுத்ததாக அங்கிருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இது இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை தற்போது ஓரளவு குறைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களால் தமிழகத்தின் திருப்பூர், கோவை பகுதிகளில் உள்ள ஜவுளி, தோல் மற்றும் மீன்வளத் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தவெக தலைவர் விஜய் பேசுவதெல்லாம் ஒரு கற்பனை கலந்த நடிப்பு. சினிமாவில் வருவது போன்ற கற்பனைகளை அரசியலில் மக்கள் ஏற்க மாட்டார்கள். ஊழல் பற்றி பேசும் அண்ணாமலை, தன்னை சுற்றி இருப்பவர்கள் யார், அவர்கள் மீது என்னென்ன வழக்குகள் உள்ளன என்பதை முதலில் பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.