தவெக கூட்டத்தில் பாஸ் இல்லாதோருக்கும் அனுமதி: புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!

தவெக கூட்டத்தில் பாஸ் இல்லாதோருக்கும் அனுமதி: புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
Updated on
1 min read

புதுச்சேரி: விஜய் வருவதற்கு 5 நிமிடம் முன்பு பாஸ் இல்லாதோருக்கும் அனுமதி தந்தனர். பாஸ் இல்லாமல் அனைவரையும் அனுமதித்ததால் புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி பெண் எஸ்பி எச்சரிக்கை விடுத்தார்.

தவெக பொதுக்கூட்டத்துக்கு 5 ஆயிரம் பேருக்கு மட்டும் கியூ ஆர் கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் புதுவையின் அண்டை மாவட்டங்களான கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களும், இளைஞிகளும் பொதுக்கூட்டம் நடைபெறும் துறைமுக வளாக பகுதிக்கு காலையிலேயே வந்து நின்றிருந்தனர்.

போலீஸார் அவர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. கியூ ஆர் கோடு வைத்திருந்தவர்கள் மட்டும் முதலில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் நெருக்கியது. தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அனைவரையும் உள்ளே அனுமதிக்கும்படி கோரினார்.

இதையடுத்து போலீஸார் பகுதி பகுதியாக பாஸ் இல்லாதவர்களையும் நெரிசல் இன்றி உள்ளே செல்ல அனுமதித்தனர். உப்பளம் துறைமுக வளாக பகுதி சுமார் 25 ஆயிரம் பேர் நின்றாலும் நெரிசல் ஏற்படாது. இதனால் பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே செல்ல அனுமதித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

விஜய் பொதுகூட்ட வளாகத்துக்கு வருவதற்கு 5 நிமிடம் முன்பு பாஸ் இல்லாத அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி: பாஸ் இல்லாமல் அனைவரையும் அனுமதித்ததால் புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி பெண் எஸ்பி எச்சரிக்கை விடுத்தார்.

தவெக பொதுக்கூட்டத்துக்கான பாதுகாப்பு பணியில் புதுவை கிழக்கு எஸ்பி இஷா சிங் ஈடுபட்டிருந்தார். கியூ ஆர் கோடு இல்லாதவர்களை அவர் உள்ளே செல்ல அனுமதி மறுத்தார்.

அப்போது அங்கு வந்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், மைதானத்தில் நிறைய இடம் உள்ளது. பாஸ் இல்லாத தொண்டர்களையும் உள்ளே செல்ல அனுமதிக்கும்படி கோரினர்.

இதனால் ஆவேசமடைந்த பெண் எஸ்பி, “உங்களால் ஏற்கனவே 40 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறை என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் சொல்லாதீர்கள். இங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் நாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும், நாங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

உங்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகளை சரியாக பின்பற்றுங்கள்” என தெரிவித்தார். இதனால் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் திரும்பினர். ஆனால், பின்னர் போலீஸார் அனைவரையும் அனுமதித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in