

சென்னை: ரூ.986.35 கோடியில், ஈரோடு-கரூர் இடையே இரட்டை பாதை திட்டப்பணிகளை மேற்கொள்ள ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் நெரிசல் மிக்க பிரதான வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதைகள் அமைக்க, ரயில்வே நிர்வாகம் ஆய்வு செய்து வாரியத்துக்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ரயில் போக்குவரத்து தேவை அதிகரித்துள்ள ஈரோடு - கரூர் 66.67 கி.மீ. வழித்தடத்தில் இரட்டை பாதை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பியது. இதற்கான, மொத்த திட்ட மதிப்பீடு ரூ.986.35 கோடி ஆகும். இந்த இரட்டை பாதை திட்டத்துக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான, கடிதத்தையும் ரயில்வே, தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பி உள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு - கரூர் இடையே இரட்டை பாதை பணிகள் ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான, தொகை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யும்போது, படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த இரட்டை பாதை முடிந்து பயன்பாட்டிற்கு வரும்போது, ஈரோடு - கரூர் - திருச்சி தடத்தில் ரயில்களின் தாமதத்தை குறைக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வரவேற்பு: சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சுப்பிரமணியன் கூறுகையில்,“ஈரோடு - கரூர் இரட்டை பாதை திட்டம், இந்த பகுதியின் பயணிகளின் நீண்ட கால திட்டமாகும். இந்த திட்டப்பணி மேற்கொள்ள ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கதக்கது.
இதன்வாயிலாக, ஈரோட்டில் இருந்து பல இடங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க முடியும். மேலும், கோவையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயிலை போடிநாயக்கனூர் வரை நீட்டித்து இயக்க வேண்டுமென தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த கோரிக்கையை நிறைவேற்றினால், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.