

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அடுத்த கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை வரும் பிப்.21-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்குகிறார்.
தமிழகத்தில் 1977 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, எதிர்க்கட்சிகளின் வெற்றியை பதம் பார்க்கும் வலுவான 3-வது அணி சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் உருவானதில்லை. ஆனால் இந்த தேர்தலில் தவெக தலைவர் விஜய் ரூபத்தில் வலுவான 3-வது அணி உருவாகி இருக்கிறது. இதனால் இந்த தேர்தல் அதிமுக, திமுக, தவெக ஆகிய 3 அணிகளுக்கும் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும்.
இதை கருத்தில் கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முதல் நபராக கடந்த ஆண்டு ஜூலை மாதமே ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அறிவித்து, அக்கூட்டணி முழுமைபெறும் தருவாயில் உள்ளது.
தனது ‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார சுற்றுப்பயணத்தை 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முடித்திருக்கும் பழனிசாமி, அடுத்த கட்ட பிரச்சாரத்தை வரும் பிப்.21-ம் தேதி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். அதன்படி, 21-ம் தேதி மாலை 5 மணிக்கு ஆவடி, அம்பத்தூர் தொகுதிகளிலும், 22-ம் தேதி மாலை 4 மணிக்கு மாதவரத்திலும், 5 மணிக்கு பொன்னேரியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து 25-ம் தேதிமாலை 5 மணிக்கு மதுரவாயல், பூந்தமல்லி தொகுதிகளிலும், 26-ம்தேதி தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.