

தருமபுரியில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் பல்வேறு கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.
தருமபுரி: ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மக்கள் பிரச்சினைகளுக்கு பதிலாக சட்டப் பேரவையில் தங்கள் சொந்த பிரச்சினைகளைத் தான் பேசுகின்றன என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி தருமபுரியில் நேற்று நடந்தது மாவட்ட செயலாளர்கள் அசோகன், டி.ஆர்.அன்பழகன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி உறுப்பினர் அட்டைகளை வழங்கி பேசியதாவது: ஏழை மாணவ, மாணவியரின் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கும் வகையில் அதிமுக ஆட்சியில் தான் 7.5 சதவீதம் சிறப்பு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ததும் அதிமுக அரசு தான்.
இன்று தவெக ஆட்சிக்கு வந்திருப்பது விபத்து. இந்த அரசு ஒரு மாதத்தில் ரூ.28 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. இந்தக் கடனை மக்கள் தான் சுமக்க வேண்டும். அதிமுக ஆட்சிக் காலத்தில் தேவைக்கு மட்டுமே கடன் வாங்கப்பட்டது.பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்தது.
இன்றைய அமைச்சர்களில் 3 பேருக்கு மட்டும் தான் பதில் அளிக்கத் தெரிகிறது. 100 நாளை ஓட்டிவிட்ட இந்த அரசு மக்களுக்கு என்ன செய்துள்ளது, ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தங்கள் சொந்தப் பிரச்சினைகளைத் தான் சட்டப்பேரவையில் பேசி வருகின்றன. மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசும் ஒரே
கட்சி அதிமுக மட்டும்தான். (இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போதே மின்சாரம் தடைபட்டு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது) இதுதான் இன்றைய ஆட்சியின் லட்சணம். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, டி.கே.ராஜேந்திரன், எம்எல்ஏ சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.