

சென்னை: “எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்கிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், ஆளுநர் உரையில் புதிதாக எந்த திட்டங்களும் இடம்பெறவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரைக்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இரவில் மின்தடை அதிகரித்துள்ளது.
ஃப்யூஸ் கேரியர் திருடு போனதாக பல்வேறு சாக்கு போக்குகளை கூறினார்கள். ஃபியூஸ் கேரியரை பிடுங்கிச் சென்றால் தமிழ்நாடு முழுவதும் எப்படி மின்வெட்டு ஏற்படும்?. முன்னர் அணில் ஓடியதால் மின்தடை ஏற்பட்டதாக திமுக சொன்னது. தற்போது இவர்கள் இதைச் சொல்கிறார்கள். தேவையான மின்சாரத்தை கொள்முதல் செய்து, தடையற்ற மின்சாரத்தை வழங்க வேண்டும்.
ஆளுநர் உரையில் புதிதாக எந்தத் திட்டங்களும் இடம் பெற வில்லை. அரசு சார்பில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் என்ன கூறப்பட்டிருந்ததோ, அதே தான் ஆளுநர் உரையிலும் கூறப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பெண்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என வீர வசனம் பேசினார்கள். தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
போதைப் பொருள் விற்பனை முன்பைவிட அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை. தவெக ஆட்சி அமைந்த பிறகு 38 நாட்களில், 150 போக்சோ வழக்குகளும் , பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 126 வழக்குகள் என மொத்தம் 276 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும் 130 கொலைகளும் நடந்துள்ளன. விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
கர்நாடகா அரசிடம் முறையாகப் பேசி முயற்சி செய்திருந்தால் குறுவை சாகுபடிக்கு நீரை பெற்று இருக்கலாம். ஆனால், இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக சிரமப்படுகிறார்கள்.
எந்த மாவட்டத்திற்கு என்னென்ன திட்டங்கள் ஒதுக்கப்படும், அதற்கான நிதி ஒதுக்கீடு என்ன என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இடம் பெறவில்லை. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. அதனைத் தடுக்க இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வீடு கட்டுபவர்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500 கொடுப்போம், முதியோர் உதவித்தொகை ரூ.3000 ஆக உயர்த்தப்படும், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்தனர். தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமாக பேசி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கம் தான் தவெக.
திமுக ஆட்சியில் எவ்வளவு கடன் இருந்தது என்பது குறித்து தேர்தலுக்கு முன்னரே தவெகவுக்கு தெரியும். இதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் வாக்குறுதிகளை அளித்தார்கள். தற்போது இவைகளை சரி செய்த பிறகு தான், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் எனக் கூறுகிறார்கள். வெள்ளை அறிக்கையின் மூலம், அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது எனத் தெரிவிக்கின்றனர். இன்றைய ஆளுநர் உரை என்பது ‘கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்’.
எனது மகன் மிதுன் அரசியலுக்கு வருவது குறித்து தொலைக்காட்சிகளில் பல்வேறு விவாதங்கள் வருகிறது. அது தவறு. அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக மட்டும்தான் உள்ளார். கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகிறேன்.
எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறேன். ஊடகங்கள் அவதூறு செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அதிமுக தலைமை சரியாக இருந்ததால்தான் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார் என்பதை மறந்துவிடக் கூடாது.
அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைத்துகூட பார்க்க கூடாது. வெற்றி, தோல்வியை மாறி மாறிதான் பெற்று வருகிறோம். என்னை விமர்சித்தவர்கள், தோற்றார்கள்; நான் அவர்களை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் ” என்று அவர் தெரிவித்தார்.