

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அவதூறாக பேசுவதாக திமுகவினர் குற்றம்சாட்டிய நிலையில், “நான் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்று எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்” என்று பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது:
இது துணை முதல்வர் உதயநிதி தொகுதி, அவர் எம்எல்ஏ ஆவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றினாரா? கழிப்பறை வசதி செய்து கொடுப்பதாகச் சொன்னார், செய்தாரா? 525 வாக்குறுதிகள் கொடுத்த திமுக அவற்றில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. கல்விக் கடன் ரத்து செய்வதாகச் சொல்லி செய்யவில்லை, நீட் தேர்வுக்கு ரகசியம் இருக்கிறது என்றார். ‘தங்கமலை ரகசியம்’ என்ற படம் இருக்கிறது, நீட் ரகசியத்தை வெளியிட்டால், அந்த கதை மாதிரி ஆகிவிடும் என்று பயப்படுகிறார் உதயநிதி.
இன்றுவரை நீட்டுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. காங்கிரஸ் தலைவரின் மனைவி நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடினார். செஞ்சதெல்லாம் காங்கிரஸ். ஆனால், திமுக நம் மீது பழி போடுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? இதுதான் ஸ்டாலினின் இரட்டை வேடம்.
திமுக ஆட்சியில் 18 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவானது. அதில் 6999 சிறுமிகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் என்று சமூகநலத்துறை அமைச்சரே சொல்கிறார். இந்த ஆட்சி நல்லாட்சியா? சிறுமிகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இப்படி ஆட்சியை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்கிறார்.
கரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் ஸ்டாலின் சரியான ஆலோசனை கொடுக்கவில்லை. அப்போது எங்கே காணாமல் போனீர்கள் என்று கேட்டேன். அதற்கு புலம்புகிறார். காணாமல் போனார் என்றுதான் பேசினேனே ஒழிய, தவறாகப் பேசவில்லை. அப்படி பேசவேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்களும், உதயநிதியும் எப்படி கேவலமாகப் பேசினீர்கள், காலுக்குள் இருக்கிறேன் என்று சொன்னீர்கள், இதை ஏற்றுக்கொள்ள முடியுமா? நீங்கள் ஒரு வார்த்தை பேசினால் 10 வார்த்தை திருப்பி பேச முடியும். நான் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பது நானல்ல, எதிரிகள் தான். 51 ஆண்டுகால அரசியல் வாழ்வில் நான் யாரையும் தவறாக விமர்சிக்கவில்லை. என்னை அவதூறாகப் பேசினால் வேடிக்கை பார்க்க மாட்டேன். உடனுக்குடன் தகுந்த பதிலடி கொடுப்பேன்.
கரோனா காலத்தில் 32 மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அதிகாரிகளை அழைத்து, வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்களை அழைத்து கருத்துகளைக் கேட்டேன், உயிரைப் பற்றி கவலைப்படவில்லை, மக்களை பற்றி கவலைப்பட்டேன். உங்களைப்போல போட்டோ ஷூட் போட்டு விளம்பரம் தேடவில்லை. அதனால் அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி.
கனமழை பெய்தால் ஒரு சொட்டு நீர் கூட தேங்காது என்றார் உதயநிதி. அப்படியா இருக்கிறது? கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால் தான் அமைச்சர், துணை முதல்வர் ஆக முடியும், கட்சிப் பதவிக்கு வரமுடியும். ஸ்டாலின் தலைவர், உதயநிதி இளைஞரணி செயலாளர், கனிமொழி துணை பொதுச்செயலாளர், தயாநிதி மாறன் விளையாட்டு அணி செயலாளர். எல்லா பதவிகளும் குடும்பத்துக்குள் தான் இருக்கிறது. அதிமுகவில் சாதாரண தொண்டன் உழைத்தால் பொதுச்செயலாளர் ஆகலாம். மக்களிடம் நற்பெயர் எடுத்தால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் கட்சி அதிமுக.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மூலைமுடுக்கெல்லாம் கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது. போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது தமிழகம். இதனால், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. 2 வயது சிறுமி, பாட்டியைக் கூட விட்டுவைக்கவில்லை. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும். இந்தியாவுக்கே முன் மாதிரி மாநிலம் தமிழ்நாடாம், ஊழல் செய்வதில், கடன் வாங்குவதில் தான் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நடுநிலையாக தேர்தல் நடத்தவே அதிகாரிகள் மாற்றம் - செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: துணை முதல்வர் உதயநிதி பேசுவதற்கு வேறு ஒன்றும் இல்லை, அரசியல் ரீதியாகப் பேசினால் பதில் சொல்லலாம். திட்டமிட்டு தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் அதற்கு தகுந்த பதிலடி நாங்களும் கொடுப்போம். சென்னை, திமுகவின் கோட்டை என்கிறார்கள். இனி சென்னை அதிமுகவின் கோட்டையாக மாறும்.
தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டதற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவர்கள் அதிகாரிகளை நம்பித் தான் இருக்கிறார்கள். மக்களை நம்பி இல்லை. நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் விரும்புகிறார்கள். அதனடிப்படையில் மாற்றுகிறார்கள். அதில் இவர்களுக்கு என்ன கஷ்டம்? திமுக ஆட்சியில் இருந்தது அந்த அதிகாரிகள் தானே? அவர்கள் திமுக அரசுக்கு ஆதரவாக இருந்தார்கள். மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் புகார்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு போய் இருக்கிறது. அந்த அடிப்படையில் நடுநிலையோடு தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் நடந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.