

ஜோலார்பேட்டை: “நான்கு அதிகார மையங்கள் தமிழ்நாட்டை ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கின்றன. நேற்று ஸ்டாலின் மருமகன் சபரீசனும் பொதுவெளியில் வந்துவிட்டார். முதல்வர், துணை முதல்வர் உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் என நான்கு பேரும் தமிழகத்தை கூறு போட்டு ஆட்டிப்படைக்கிறார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஜோலார்பேட்டையில் வெள்ளிக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: ‘’திருப்பத்தூர் மாவட்டம் உருவாகக் காரணமானவர் கே.சி.வீரமணி. ஜெயலலிதா அரசு திருப்பத்தூரை புதிய மாவட்டமாக அறிவித்தது. மாவட்ட மருத்துவமனை வழங்கிய அரசு அதிமுக அரசு. தமிழகம் மோசமான நிலையில் இருப்பது பற்றி ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இன்று தமிழகத்தில் போதைப்பொருள் விற்காத இடமே இல்லை. நாம் பெற்ற பிள்ளைகளை, குழந்தைச் செல்வங்களை கண்ணை இமை காப்பது போல் வளர்த்து ஆளாக்கியிருக்கிறோம். ஆனால், இந்த ஆட்சியில் நடக்கும் கொடுமை காரணமாக போதைப்பொருள், கஞ்சா பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலே அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கஞ்சாவை பயன்படுத்தி கண் எதிரே பிள்ளைகள் சீரழியக்கூடிய நிலைமை தொடர வேண்டுமா? இப்படிப்பட்ட ஆட்சி நாட்டுக்கு தேவையா? இது ஒரு கொடுமையான ஆட்சி.
போதைக்கு இந்த அரசால் தீர்வு காண முடியவில்லை. ஏனென்னால் கஞ்சா விற்பனை செய்வோருக்கு துணை நிற்பது ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தான். அதனால் தான் கஞ்சாவை கட்டுப்படுத்தவில்லை. அதை பற்றி மக்கள் சிந்திக்கவேண்டிய நேரம் இது. தமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. வாக்காளப் பெருமக்கள் தான் நீதிபதிகள். தீர்ப்பு உங்கள் கையில் தான் இருக்கிறது. நீங்கள்தான் வெற்றி தர வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியவில்லை. சிறுமிகள் பள்ளிக்குக் கூட போக முடியவில்லை. அவ்வளவு கொடுமையான ஆட்சி. சிறுமிகள், பெண்கள், பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை. கேவலமான இந்த ஆட்சியை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஸ்டாலின். இதுவரை நடந்தது போதாதா? 5 ஆண்டு காலம் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டீர்கள். இப்படி ஒரு திறமையற்ற முதலமைச்சர், பொம்மை முதல்வர் நாட்டை ஆள்வதால், நாடு சீழிந்துகொண்டு இருக்கிறது. இதிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். மீண்டும் தமிழகம் தலைநிமிர வேண்டும் என்றால் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும்.
மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். அதிமுக ஆட்சி இருக்கும் வரை சிறுபான்மை மக்களை கண்ணை இமை காப்பது போல் காத்தோம். திமுக ஆட்சி வந்த பிறகு ஒட்டு மொத்த மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. திட்டமிட்டு சிறுபான்மை மக்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, வாக்குகளை பெற ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார் நாங்கள் அப்படி அல்ல. வாக்குக்காக ஆட்சி செய்யவில்லை. மக்களுக்காக ஆட்சி செய்யும் கட்சி அதிமுக.
2011 முதல் 2021 வரை அதிமுக 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்குக் கொடுத்தோம். எதிர்க்கட்சிகள் கூட பாராட்டுகிற அளவிற்கு சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். இன்று திமுக செய்வது ஒரு குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல். இந்த தேர்தலில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். குடும்ப ஆட்சி தேவையா, வாரிசு அரசியல் தேவையா என்று யோசித்து முடிவெடுங்கள்.
நான்கு அதிகார மையங்கள் தமிழ்நாட்டை ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கின்றன. நேற்று ஸ்டாலின் மருமகன் சபரீசனும் பொதுவெளியில் வந்துவிட்டார். முதல்வர், துணை முதல்வர் உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் என நான்கு பேரும் தமிழகத்தை கூறு போட்டு ஆட்டிப்படைக்கிறார்கள். இந்த தேர்தலில் அதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இப்படிப்பட்ட ஒரு குடும்பம் அதிகாரம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியுமா..?
தமிழகம் இந்த அளவிற்கு தலை குனிவதற்கு காரணம் இந்த அதிகார மையங்கள் தான். இந்த அதிகார மையங்கள் மூலம் எல்லா துறைகளிலும் கொள்ளை அடிக்கும் காட்சிகளைப் பார்க்கிறோம். இந்தந்த துறை இவர்களுக்கு என்று நான்கு பேரும் பங்கு போட்டுக்கொண்டு விட்டார்கள். பிறகு எப்படி நாடு வளரும்.?
2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திமுக சார்பில் திமுக ஆட்சிக்கு வந்தால் 525 வாக்குறுதிகள் கொடுத்து, அதை நிறைவேற்றுவோம் என்று சொன்னார்கள். அதை முழுவதுமாக ஸ்டாலின் நிறைவேற்றினாரா..? அவர் அறிவிப்புகளில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றப்படவில்லை.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தார்களா? கேஸ் மானியம் 100 ரூபாய் தந்தார்களா? நூறு நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்றார்கள், செய்தார்களா? கல்விக்கடன் ரத்து செய்தார்களா? ரேஷன் கடையில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக தருவோம் என்றார்கள், தந்தார்களா? அத்தனையும் ஏமாற்று வேலை.
ஏற்கனவே கொடுக்க வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில் புதிதாக வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் ஸ்டாலின். கூப்பன் கொடுக்கிறாராம். அது எதுக்கு..? அந்த கூப்பனை திமுககாரர்களிடம் கொடுத்து அதில் கமிஷன் அடிக்கத்தான் பயன்படும். திமுக இனி எப்போதும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. இந்த தேர்தலுடன் திமுகவிற்கு மூடுவிழா நடத்தப்படும்.
திமுக கட்சியின் ஷட்டரை இழுத்து மூடியாச்சு. குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் செய்யும் ஒட்டு மொத்த திமுகவிற்கும் மூடு விழா. அண்மையில் மத்திய அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் சாதிவாரிக் கணக்கடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படும்.
திமுக ஆட்சியில் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துவிட்டது. வீடுகளுக்கு முதலில் 52% உயர்த்தினார்கள். ஆண்டுக்கு 5% என மூன்றாண்டுகளில் 15% உயர்த்தி, இப்போது 67% ஆக உள்ளது. கடைக்கு பீக் ஹவர் என்ற பெயரில் டபுள் சார்ஜ் வசூலிக்கிறார்கள். வீட்டுவரி 100% உயர்ந்துவிட்டது, ஆண்டுக்கு 6% உயர்வு என்று இரண்டு வருடத்தில் 12% ஏற்றிவிட்டனர். கடைக்கு வரி 150% உயர்ந்துவிட்டது, கடைக்கும் ஆண்டுக்கு 6% உயர்வு. போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர். மக்கள் மீது வரிச்சுமை சுமத்திய அரசு தேவையா?
அதேபோல்,நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி வீட்டுவரி 100 சதவீதம் உயர்த்தி விட்டார்கள். குடிநீர், குப்பைக்கு கூட வரி போட்ட அரசு திமுக அரசு தொடர வேண்டுமா?
இந்த ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவது பற்றி இந்த அரசுக்கு கவலை இல்லை. குடும்பத்தினருக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். கட்சியில் உயர்ந்த பதவி வேண்டும். என்று தான் ஸ்டாலின் நினைக்கிறார். இப்படிப்பட்ட முதல்வர் தேவையா?
அரசிவிலை, பருப்புவிலை உயர்ந்தும் கூட இந்த அரசு விழித்துக்கொள்வில்லை. இந்த ஆட்சி ஒரு விளம்பர ஆட்சி. தினந்தோறும் விளம்பரம் வந்துகொண்டே இருக்கும். போட்டோ சூட் எடுப்பார். ஒரு அறிவிப்பை வெளியிடுவார், அதற்கு ஒரு பேர் வைப்பார், அது, பத்திரிகைகளில் வரும், டிவியில் வரும். அன்றோடு முடிந்து விடும். பேர் வைப்பதற்கு வேண்டுமானால் நோபல் பரிசு முதல்வர் ஸ்டாலினுக்குக் கொடுக்கலாம். அது அவருக்கு பொருத்தமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.