

திருப்பூர்: விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் கட்சி அதிமுக என்று தாராபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து கன்னிவாடி பகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: விவசாயிகளுக்கு குடிமராமத்து திட்டம் செய்து கொடுத்தோம். இப்போது அண்மையில் சட்டப்பேரவை கூட்டத்தில் கனிமவளத்துறை அமைச்சரிடம் குடிமராமத்து திட்டம் மூலம் ஏரிகளை தூர்வாற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி
னேன். அதிமுக தான் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கிறகட்சி. ஆட்சியில் இருக்கிற போதும், இல்லாதபோதும் சட்டப்பேரவையில் விவசாயிகள் குரலாக ஒலிக்கிறோம்.
விவசாயிகளுக்காக ஆராய்ச்சி நிலையத்தில் ஆடு களை உருவாக்கி இருக்கிறோம். ஒரு ஆண்டுக்கு 40 கிலோ ஆடுகிடைக்கும். நான் வெளிநாடு சென்றபோது, அங்குள்ள பண்ணையில் ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறப்பதை பார்வையிட்டேன். இதையொட்டி தமிழகத்தில் ஆராய்ச்சி மையம் மூலம் கலப்பின பசு உருவாக்கி தர திட்டமிட்டுபணி செய்தோம். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.
லண்டனில் முதல்வர் தமிழ்நாட்டு தொழில் முதலாளிகளை சந்தித்து பேசினார். அடுத்ததாக சுவிட்சர்லாந்து போகிறாராம். எங்கே போனாலும் சரி மக்களுக்கு நல்ல திட்டம் கொடுங்கள். இங்கே இருக்கிற விவசாயிக்கு காலுக்கு செருப்பில்லை. உடுக்க உடையில்லை. இந்த நிலைமையில் உங்கள் வசதிக்காக கடன் வாங்கி சட்டப்பேரவைக் கட்ட வேண்டுமா?
அதேபோல முதல்வர் அறை இருக்கிறது. இதில், அண்ணா, எம்ஜிஆர், அம்மா என அனைவரும் பணியாற்றினோம். இவருக்கு மட்டும் பிடிக்கவில்லையாம். நாமக்கல் கவிஞர் மாளிகையில் 40 ஆயிரம் சதுரடி எடுத்துக்கொண்டு சொகுசாக சீரமைக்கிறார். ஜன்னலை திறந்தால் கடல் காற்று பட வேண்டும் என்றால் அதற்கு ஏழை மக்கள் பணம்தான் கிடைத்ததா?
ஒவ்வொரு ரூபாயும் மக்கள் பணம். தவெக முதல்வர் காஸ்ட்லி முதல்வவாக இருக்கிறார். சனி மற்றும் ஞாயிறுக்கிழமை விடுமுறை வேறு. இப்படிப்பட்ட முதல்வரை இந்தியாவில் யாரும் பார்த்ததில்லை. தவெகவை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போட்டியிடுகின்றனர். மீண்டும் ஒரு தேர்தல் வரக்கூடாது என ஆதரிக்கின்றனர். பல முறை எச்சரித்து விட்டனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் ஆதரவை வாபஸ் வாங்குவோம் என கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.