

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகதில் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.படம்:எஸ். சத்தியசீலன்
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள 5 தொகுதி இடைத்தேர்தலில்களில் அதிமுக வெற்றிக்குத் தீவிர பணியாற்றுங்கள் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வாரியாக உள்ள உட்கட்சி விவகாரங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் பழனிசாமி கேட்டறிந்தார்.
பின்னர் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதை எதிர்கொள்ள மாவட்டச் செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும். அத்தொகுதிகளில் அதிமுக வெற்றிக்கு களப்பணிகளை இப்போதே தொடங்குங்கள், தீவிரமாக களப்பணியாற்றுங்கள். தகுதியான வேட்பாளர்களையும் தேர்வு செய்து வையுங்கள்.
ஆளுங்கட்சி எப்போதும் அதிகார பலத்தில் இருக்கும். இருப்பினும் அதை எதிர்கொண்டு அரசியல் செய்ய வேண்டும். தோல்விகளை கண்டு கலங்க வேண்டாம். தோல்விகளை வெற்றிப்படிக்கட்டுகளாக மாற்றியவர் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதுதான் அதிமுகவின் வரலாறு.
கட்சி மீது அதிருப்பதியில் இருப்பவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். வரும் நவ.12-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடங்குகிறது. அதில் யாருடைய பெயராவது நீக்கப்பட்டிருந்தால், உடனடியாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சியினர் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் உடனடியாக, அதிமுக சட்ட அணியினருடன் தொடர்புகொண்டு, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும்.
கட்சியில் இளைஞர்கள் மற்றும் மகளிரை அதிக அளவில் சேர்க்க வேண்டும். தவெக அரசின் அவலங்களை, மக்கள் விரோத செயல்களை, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலையச் செயலாளர் வரகூர் அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதிமுகவில் வெள்ளத்துரை: தமிழகத்தில் நடைபெற்ற அயோத்திகுப்பம் வீரமணி, சந்தனக்கடத்தல் வீரப்பன் உள்ளிட்டோர் என்கவுன்டர்களில் முக்கிய பங்காற்றியவர் எஸ்.வெள்ளத்துரை. இவர், சசிகலா தொடங்கிய அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு சுமார் 1000-க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருந்தார். இந்நிலையில், சென்னையில் நேற்று பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் வெள்ளத்துரை அதிமுகவில் இணைந்தார்.