

தஞ்சாவூர்: கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரை பெற தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், மேகேதாட்டு அணை கட்டுவதை தடுக்க முயற்சிக்காத தமிழக அரசைக் கண்டித்தும் தஞ்சாவூரில் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியது: டெல்டா மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. தவெக அரசு, காவிரி நீரை கர்நாடகாவிடம் இருந்து பெற ஆர்வம் காட்டவில்லை. பாதித்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் தரவேண்டும்.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, விவசாயிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள 10 லட்சம் டன் நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியது: தவெகவின் 100 நாள் ஆட்சியில் மக்களுக்காக எந்த ஒரு புதிய திட்டமும் இல்லை. விவசாயிகள் போராட்டம், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் போராட்டம் என போராட்டங்கள்தான் அதிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பட்ஜெட்டில் ஏற்கெனவே இருக்கும் திட்டங்களுக்கு பெயரை மாற்றி, ‘வெற்றி வெற்றி’ என்று பெயர் சூட்டியதுதான் இந்த ஆட்சியின் 100 நாள் சாதனை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.