

சென்னை: திருட்டுத் தங்கத்தை வாங்கி சட்டவிரோத பணிப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான 16 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 2 நாட்கள் நடத்திய சோதனையில் ரொக்கம், தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களிடம் உள்ள பழைய தங்க நகைகள் மற்றும் அடகு வைக்கப்பட்ட தங்கத்தை வாங்கி, அதற்கு அன்றைய சந்தை விலைக்கு ஏற்ப உடனடிப் பணம் வழங்கும் பிரபல வணிக நிறுவனமான தனியார் நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
இந்நிறுவனம், அதன் பங்குதாரர்கள் மற்றும் இயக்குநர்கள், திருட்டுத் தங்க நகைகள் மற்றும் பொருட்களை வாங்குதல் மற்றும் பதுக்குதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகைளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அந்தவகையில், காவல்துறையின் எஃப்.ஐ.ஆர்-களை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக விசாரணையை தொடங்கியது.
விசாரணையில், இந்நிறுவனம், திருட்டு நகைகளை வாங்கி, அதன்மூலம் பெருமளவில் சட்டவிரோதப் பணத்தைப் பரிமாற்றம் செய்தது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் பெங்களூரு, சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்பட 16 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: திருட்டு தங்க நகைகளைத் தொடர்ச்சியாக வாங்கிச் சட்டவிரோதமாகப் பணம் சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில், தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனை நடத்தியுள்ளது.
பெங்களூரு, சென்னை, ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், கிளைகள், அதன் இயக்குநர்கள், முன்னாள் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்களின் வீடுகள் உட்பட மொத்தம் 16 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிறுவனத்துடன் தொடர்புடைய முக்கிய நபர்களான பி. எஸ். அயூப் (எ) பொம்மனஹள்ளி பாபு, ஒபேதுல்லா ஏ, முகமது சல்மான் ஏ மற்றும் அர்பின் தாஜ் ஏ ஆகியோர் இந்த சட்டவிரோத குற்ற நடவடிக்கைகள் மூலம் பெருமளவிலான சொத்துக்களை சேர்த்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சோதனை நடைபெற்ற போது, இவர்கள் ஒத்துழைப்பு வழங்காமல் தலைமறைவாகி விட்டனர். மேலும், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் சோதனை சமயத்தில் அங்கு இருக்கக்கூடாது என இவர்களால் முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரு நாட்கள் நடைபெற்ற தீவிர சோதனையின் முடிவில், குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட ரூ. 7,52,000 ரொக்கப் பணம், கணக்கில் வராத பெருமளவிலான வெளிநாட்டு நாணயங்கள், தங்க நகைகள் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.